சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகரும் ரஜினிகாந்தின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் ரஜினியின் திருமணத்தைப் பற்றி சுவாரசியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
சீனியர் மகேந்திரன்
நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வராகங்கள் படத்திலேயே ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருப்பார் சினிமாவில் ரஜினிக்கு சீனீயராக இருப்பவர் மகேந்திரன். பின்னர் கழுகு, நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதனால் அப்போதிருந்தே ரஜினியும் இவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
கல்லூரி மாணவியின் பேட்டி
அந்தக் காலகட்டத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒய்.ஜி.மகேந்திரனின் உறவுக்கார பெண்ணான லதா தனது கல்லூரி பிராஜெட்டிற்காக நடிகர் ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் அதற்கு நீங்கள்தான் உதவி புரிய வேண்டும் என்று ஒய்.ஜி.மகேந்திரனிடம் கேட்டுள்ளார். அவரும் தில்லு முல்லு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்று அந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ரஜினியின் ஃபோன் கால்
இந்த சந்திப்பு முடிந்து சில காலங்கள் கழித்து ஒரு நாள் ரஜினி தனக்கு போன் செய்து, நான் லதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டுள்ளாராம். அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக நடிகை லதாவை தான் ரஜினி திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார் என்று நினைத்து எதற்காக என் சம்மதத்தை கேட்கிறீர்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் நடித்துள்ளீர்கள். நானும் உங்களுடன் அந்தப் படத்தில் நடித்தேன், அதற்காக என்னிடம் ஏன் சம்மதம் கேட்கிறீர்கள் என்று ஒன்றும் புரியாமல் கேட்டாராம்.
ரஜினி விளக்கம்
பிறகுதான் ரஜினி தட்டு தடுமாறி நான் சொன்னது நடிகை லதாவை அல்ல உங்கள் உறவினர் லதாவை என்று விளக்கியுள்ளார். ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தாலும் எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை, தாராளமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். பிறகுதான் அவருக்கு தெரிய வந்ததாம் அந்தப் பேட்டி எடுக்கும் முன்னரே லதாவிற்கு ரஜினி மீது ஒரு அபிப்பிராயம் இருந்ததாகவும் அதனால்தான் நடிகர்கள் நாகேஷ், ஜெய்சங்கர், கமலஹாசன் போன்றவர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்காமல் ரஜினியிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று தன்னிடம் கேட்டுள்ளார் என்பதையும் புரிந்து கொண்டாராம் ஒய்.ஜி.மகேந்திரன். அது மட்டும் இல்லாமல் இரு குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்ததான் ஏற்பாடு செய்தேனே தவிர நான்தான் திருமணத்தை நடத்தி வைத்தேன் என்று சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.