புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார்.
கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சமர்கண்ட் சென்றார். மாநாட்டில் இன்று நடைபெறும் நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்துவிவாதிக்கப்பட உள்ளது. அமைப்பின் விரிவாக்கம், பரஸ்பரம் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதுகுறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.