திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் 13 வயது மகளை 2 வருடம் பலாத்காரம் செய்த தந்தைக்கு மரணம் வரை சிறைத் தண்டனை விதித்த திருவனந்தபுரம் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 44 வயதான ஒருவர் தனது 13 வயது மகளை கடந்த 2 வருடங்களாக பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது. பள்ளியில் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில் அந்த மாணவி விவரத்தை கூறினார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், மாணவியின் தந்தைக்கு மரணம் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மாணவியின் தந்தைக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. மாணவியின் வயதை நிரூபிப்பதற்கு தேவையான சான்றிதழ்களை தாக்கல் செய்ய முடியாததால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த போக்சோ பிரிவுகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.