புதுடெல்லி: இந்தியாவிற்கு சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்திற்கு, கடந்த 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறி உள்ளது. இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தையை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கண்டங்களுக்கு இடையேயான இடமாற்ற திட்டத்தின் கீழ், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்படுகிறது. போயிங் விமானம் மூலம் 3 ஆண் மற்றும் 5 பெண் சிறுத்தைகள் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குனோ உயிரியல் பூங்காவில் மின்வேலி அமைக்கப்பட்ட பகுதியில் பராமரிக்கப்பட உள்ளன.
இந்த சிறுத்தைகள் இன்று குவாலியருக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில், காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில், ‘சிறுத்தைகள் திட்டம் கடந்த 2008-09ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் தரப்பட்டது. அப்போதைய ஒன்றிய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 2010ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு நேரில் சென்று சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்தை விரைவுபடுத்தினார்.
ஆனால், 2013ம் ஆண்டு இத்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் 2020ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தது. அதன் மூலமாகத்தான் இப்போது சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன’ என கூறப்பட்டுள்ளது.
*56 வகை சாப்பாடு: பரிசு ரூ.8.5 லட்சம்
டெல்லியில் உள்ள ஒரு உணவகம் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி “56 இன்ச் மோடி” சாப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 20 வகையான சப்ஜி, ரொட்டி, பருப்பு மற்றும் குலாப் ஜாமுன், குல்பி என 56 உணவு அயிட்டங்கள் இடம் பெற்றிருக்கும். சைவ சாப்பாடு விலை ரூ.2,600. அசைவ சாப்பாடு விலை ரூ.2,900. ஒருவர் அல்லது 2 பேர் சேர்ந்து 40 நிமிடத்தில் இந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தால், அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.8.5 லட்சம் வழங்கப்படும் எனவும் இப்போட்டி 10 நாட்களுக்கு நடைபெறும் எனவும் ஓட்டல் உரிமையாளர் கூறி உள்ளார்.