25 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: டெல்டாவில் இருந்து திருநெல்வேலிக்கு நேரடி விரைவு ரயில் சேவை; ரெயில்வே துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

கும்பகோணம்: டெல்டா பகுதி மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையாக டெல்டா பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில் சேவையை துவங்கியுள்ளதால், ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் பொதுமக்கள் ரயில்வே துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக ரயில் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வந்த மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து மதுரை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் வசதியை விரைவில் ரயில்வே துறை ஏற்படுத்த உள்ளது.

கும்பகோணம் வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையில் பல ஆண்டுகளாக நேரடி ரயில் இயங்கி வந்தது. பின்னர் அகலப்பாதை பணிக்காக அந்த ரயில் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு செங்கோட்டை சென்னை இடையே பாசஞ்சர் ரயிலாக நீண்ட காலம் இயங்கி வந்தது. இதனால் டெல்டா பகுதி பயணிகள் மதுரை விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு எளிதாக பயணிக்க முடிந்தது. ஆனால் 1995ம் ஆண்டு மதுரையில் இருந்து இயக்கப்பட்ட இந்த ரயில் சேவை சில ஆண்டுகளுக்குப் பின்னர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

கடந்த 145 ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சாவூர் விழுப்புரம் ரயில் பாதை கடந்த 2011ம் ஆண்டு முற்றிலும் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. அப்போது முதல் செங்கோட்டை சென்னை இடையே முன்னர் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய பாசஞ்சர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கும்பகோணம் வந்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அப்போதைய எம்.பி பாரதிமோகன் மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் முதலானோர் நேரடியாக இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதையடுத்து தாம்பரம் செங்கோட்டை இடையே கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக புதிய அந்தியோதயா வகை ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ரயில் இயக்கப்படாமல் வெறும் அறிவிப்போடு கைவிடப்பட்டது. அதன் பின்னர் மயிலாடுதுறை செங்கோட்டை இடையே நேரடியாக இயக்க மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் மற்றும்
பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அண்மையில் தென்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனுஷ்குமார் (தென்காசி), வேலுச்சாமி (திண்டுக்கல்) சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா உட்பட பலர் செங்கோட்டை மதுரை மற்றும் திண்டுக்கல் மயிலாடுதுறை ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக இயக்க கோரினர். இதையடுத்து தற்போது மயிலாடுதுறை திண்டுக்கல் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலை மதுரை செங்கோட்டை இடையே இயக்கப்படும் மற்றொரு விரைவு ரயிலுடன் இணைத்து ஒரே ரயிலாக மயிலாடுதுறை செங்கோட்டை இடையே இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ரயில் வாரிய ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், விரைவில் 14 பெட்டிகளுடன் இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்றும், மயிலாடுதுறை செங்கோட்டை இடையே நேரடி ரயில் இயக்கத்திற்கான தேதி மற்றும் முழு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் வசதியை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்த ரெயில்வே நிர்வாகத்திற்கும், அதற்கு முயற்சி செய்த மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், இந்த புதிய இணைக்கப்பட்ட ரயில் சேவை மூலம் கும்பகோணம் தஞ்சாவூர் பகுதியிலிருந்து விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிரமமின்றி நேரடியாக பயணிக்க முடியும். ஆரியங்காவு வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக அமையும். டெல்டா பகுதியிலிருந்து கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி செல்லும் பயணிகள் இரு மார்க்கங்களிலும் மதுரை அல்லது விருதுநகரில் இறங்கி ஈரோடு திருநெல்வேலி விரைவு ரயில் மூலம் பயணித்தும் பயனடையலாம் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி தெரிவித்தார்.

சபரிமலை பக்தர்களுக்குஇந்த ரயில் அதிக பயன்
இந்த புதிய இணைக்கப்பட்ட ரயில் சேவை மூலம் கும்பகோணம் தஞ்சாவூர் பகுதியிலிருந்து விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிரமமின்றி நேரடியாக பயணிக்க முடியும். ஆரியங்காவு வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.