நாளை செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். இதையொட்டி ஏராளமான நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார். குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்படும் சிவிங்கிப் சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ம் தேதி (நாளை) தனது பிறந்த நாள் அன்று தன் கைகளால் திறந்துவிடவுள்ளார். மேலும் அவரது கட்சித் தொண்டர்கள் மோடியின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள `ஆர்டார் 2.1′
உணவகம் மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ’56 இன்ச் மோடி ஜி தாளி’ என்ற பெயரில் உணவு போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது.
செப்டம்பர் 17 முதல் 26 வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 56 உணவு வகைகள் கொண்ட தாளி என்ற உணவை 40 நிமிடங்களில் சாப்பிடுபவர்களுக்கு ரூ.8.5 லட்சம் பரிசகாத் தரப்படும் என்று அந்த உணவகத்தின் உரிமையாளர் சுமித் கல்ரா கூறியுள்ளார். இது பற்றிக் கூறும் அவர், “பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் நமது தேசத்தின் பெருமை. அவரது பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை பரிசளிக்க விரும்பினோம். எனவே அவரது பெயரில் ’56 இன்ச் மோடி ஜி தாளி’ என்ற இந்த பிரமாண்ட தாளியை அறிமுகப்படுத்த முடிவு செய்தோம். இதை நாங்கள் அவருக்கு பரிசாக வழங்க விரும்புகிறோம். இந்த தாளியை அவர் இங்கு வந்து சாப்பிட வேண்டும்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களால் எங்களால் அதை செய்ய முடியாது. எனவே இது அவரை மிகவும் நேசிக்கும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறோம். மேலும், இந்தத் தாளியுடன் சில வெகுமதிகளையும் பரிசாக அளிக்க விரும்புறோம். யாரேனும் ஒருவர் இந்த தாளியை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் அவர்களுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் செப்டம்பர் 17 முதல் 26 வரை எங்களைச் சந்தித்து இந்தத் தாளியை உண்பவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலி கேதார்நாத் பயணம் செல்லும் டிக்கெட்டை வெல்வார்கள். ஏனெனில் கேதார்நாத் பிரதமர் மோடியின் விருப்பமான இடங்களில் ஒன்றாகும்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.