80% தோல்வி எதிரொலி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்…

சென்னை: தமிழகஅரசு பள்ளிகளில், மாணவர்கள் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில், மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்த நிலையில் மீண்டும் நீட் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் தகுதித்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவதையொட்டியே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தமிழகஅரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை ஏற்க மத்தியஅரசு மறுத்துவருகிறது. இதையடுத்து கடந்த அதிமுக அரசில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நீட் இலவச பயிற்சி வழங்கியது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடும் வழங்கியது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புக்கு சேரும் வாய்ப்பு பெற்றனர்.

ஆனால், கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு விலக்கு கேட்டு மீண்டும் மசோதா நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பியதடன், நீட் கோச்சிங்கையும் நிறுத்தியது. இதனால், கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவத்தில் சேரும் வாய்ப்பு வெகுவாக குறைந்த நிலையில், நடப்பாண்டு, படுமோசமானது. நீட் தேர்வை எழுதிய சுமார் 80 சதவிகித மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.

இந்த நிலையில்,  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள்  மீண்டும் தொடங்க தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி,  நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்  முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.