ஐ.பி.எல் உட்பட உள்ளூர் டி20 தொடர்களில் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கும் வகையில் ஒரு புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. `Impact Player’ எனப்படும் இந்த விதிமுறையை அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சையத் முஷ்தாக் அலி டி20 தொடரிலிருந்தே பிசிசிஐ நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. `Impact Player’ விதிமுறை என்றால் என்ன?
புதிய ‘Impact player’ விதியின்படி, டாஸின் போது கேப்டன்கள் ப்ளேயிங் லெவனை அறிவிக்கும்போதே 4 சப்ஸ்டிடியூட் வீரர்களின் பெயரையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் போட்டியின் சூழலை பொறுத்து ஏற்கெனவே ப்ளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை இந்த சப்ஸ்டிடியூட் லிஸ்ட்டில் உள்ள ஏதேனும் ஒரு வீரரைக் கொண்டு ரீப்ளேஸ் செய்துகொள்ளலாம். இதுதான் ‘Impact player’ எனும் புதிய விதிமுறை.
ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் சூழலைப் பொறுத்து கூடுதலாக ஒரு பேட்டர் தேவைப்படும்பட்சத்தில் லெவனில் உள்ள ஏதேனும் ஒரு வீரரை மாற்றிவிட்டு பென்ச்சிலிருந்து ஏதேனும் ஒரு பேட்டரை அழைத்துக் கொள்ளலாம். ஒருவேளை பிட்ச் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கிறது, கூடுதலாக ஒரு பௌலர் தேவையெனினும் லெவனில் உள்ள ஒரு வீரரை மாற்றி பௌலரை எடுத்துக்கொள்ளலாம். ‘Impact Player’ விதிமுறை மூலம் இந்த சௌகரியத்தை அணிகள் பெறும்.
இந்த விதிமுறையைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமில்லையெனில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், விருப்பம் என்றால், ஒரு இன்னிங்ஸின் 14வது ஓவருக்குள் இந்த ‘Impact Player’ விதிமுறையை பயன்படுத்தியாக வேண்டும். இதைத்தான் வரவிருக்கும் சையத் முஷ்தாக் அலி தொடரிலிருந்து பிசிசிஐ நடைமுறைக்குக் கொண்டு வரவிருக்கிறது. அடுத்த ஐ.பி.எல் சீசனிலும் இந்த விதிமுறையை எதிர்பார்க்கலாம்.
இந்த விதிமுறை எங்கோ கேட்டது போன்று இருக்கிறதென தோன்றும். நீங்கள் நினைப்பது சரிதான். ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீகில் இதே போன்றதொரு விதிமுறை கடந்த இரண்டு சீசன்களாக நடைமுறையில் இருக்கிறது. ‘X-Factor Player’ எனும் அந்த விதிமுறையும் ‘Impact Player’ விதிமுறையை ஒத்ததுதான். ‘X-Factor’-ன் படி இரண்டு வீரர்களை சப்ஸ்டிடியூட்டாக அறிவிக்க வேண்டும். முதல் இன்னிங்ஸின் 10வது ஓவர் முடிகையில் எதாவது ஒரு வீரரை அணிகள் ரீப்ளேஸ் செய்துகொள்ள முடியும்.
அந்த X-Factor ஐ பின்பற்றியே இங்கே Impact Player எனும் விதிமுறை கொண்டு வரப்படுகிறது.
இப்படியான புதிய விதிமுறைகளை இனியும் எதிர்பார்க்கலாம். காரணம், உலகம் முழுவதும் டி20 ப்ரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சந்தைக்கான போட்டி அதிகமாகியிருக்கிறது. அதனால் எவ்வளவு அதிகமாக போட்டியைச் சுவாரஸ்யமாக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சுவாரஸ்யமாக்க நினைக்கின்றனர். பிக்பேஷ் லீகில் அந்த X-Factor மட்டுமில்லை, கூடவே Power surge, Bash Boost என்ற இரண்டு விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருந்தனர். பவர் சர்ஜ் முதல் 6 ஓவர் பவர்ப்ளேயை இரண்டாக பிரிக்கிறது. அதன்படி, முதல் 4 ஓவருக்கு மட்டுமே பவர்ப்ளே இருக்கும். அடுத்த 2 பவர்ப்ளே ஓவர்களை பேட்டிங் ஆடும் அணி 11வது ஓவருக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 10 ஓவர்கள் முடிவில் எதிரணி எடுத்திருந்த ஸ்கோரை விட அதிகமாக ஒரு அணி எடுக்கும்பட்சத்தில் அப்போதே அந்த அணிக்கு ஒரு புள்ளி கிடைத்துவிடும். இதுதான் Power Surge.
இந்த விதிமுறை அறிமுகங்களெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை முதன்மையாகக் கொண்டே செய்யப்படுகிறது. 40 ஓவர்களுக்கும் பார்வையாளர்களை நகரவிடாத வகையில் தடாலடியாக எதாவது நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ராஜமௌலி படத்தின் திரைக்கதை பேட்டர்னைப் பார்த்திருக்கிறீர்களா? ஊர்ந்து மெதுவாக முன்னேறி வேகம்பிடிக்கும் வகையிலெல்லாம் அவருடைய படங்கள் இருக்காது. தொடக்கத்திலிருந்தே வேகம்தான்.
ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கும் எதோ ஒரு பிரமிக்க வைக்கும் sequence நிகழ்ந்துகொண்டே இருக்கும். அது ரசிகர்களைக் கடைசி வரை engaging ஆகவே வைத்திருக்கும். கிட்டத்தட்ட ராஜமௌலியின் அந்த ஃபார்முலாவைத்தான் இந்த கிரிக்கெட் போர்டுகளும் அப்ளை செய்ய நினைக்கின்றனர்.
‘Impact Player’ என்ற விதிமுறையை இப்போது அறிமுகப்படுத்தவிருக்கும் பிசிசிஐ இன்னும் சில சீசன்களில் பிக்பேஷைப் போன்றே போட்டியை விறுவிறுப்பாக்க மேலும் மேலும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தும். டி20 என்கிற இந்த ஃபார்மேட்டின் வருகையால் மற்ற ஃபார்மேட்கள் நிச்சயமாக வரவேற்பற்றதாக மாறும் எனக் கூறப்பட்டது. அது உண்மைதான். ஆனால், இப்போது இந்த டி20 யின் சுவாரஸ்யத்துக்கே வீடியோ கேம்ஸைப் போன்று எக்கச்சக்க அப்டேட் தேவைப்படும் நிலைக்கு வந்து நிற்கிறோம்.
Impact Player விதிமுறையை பற்றிய உங்களின் அபிப்ராயம் என்ன? இதேபோன்று வேறென்ன மாதிரியான விதிமுறைகளை அறிமுகப்படுத்தலாம் என பிசிசிஐ-க்கு ஒரு ஐடியா கொடுங்களேன்.