மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாமதமாக காலை உணவு வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல் நாள் மதுரையில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
காலை உணவு திட்டம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது. வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண்டிஷன் என்ன?
மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில முக்கியமான உத்தரவுகளை பள்ளிகளுக்கு பிறப்பித்து இருந்தார். உணவுகளை காலையில்தான் சமைக்க வேண்டும். அதோடு காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். தாமதம் ஆகும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தாமதம்
அதன்படியே மயிலாடுதுறையில் முதல் நாளே தாமதமாக சமைக்கப்பட்ட உணவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள திருஅழுந்தூர் நகராட்சி பள்ளியில்தான் மாணவ, மாணவர்களுக்கு தாமதமாக உணவு கொடுக்கப்பட்டுள்ளது. 7.30 மணிக்கு உணவு சமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் நிகழ்ச்சியை தொடர்ந்த நகராட்சி நிர்வாகிகள் வர தாமதம் ஆகியுள்ளது. 9 மணி தாண்டிதான் நகராட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இதனால் துவக்க விழா தாமதமாக துவங்கி உள்ளது.
கொடுமை
இதனால் பிஞ்சு குழந்தைகள் உணவு சாப்பிடாமல் 2 மணி நேரமாக காத்திருந்துள்ளனர். 9.30 மணிக்கு பின்புதான் இவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் முன்பே இதை பற்றி கடுமையான கட்டுப்பாடுகளை கொடுத்து இருந்தார். டு காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். 8.30 மணிக்குள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் மயிலாடுதுறையில் உள்ள திருஅழுந்தூர் நகராட்சி பள்ளியில் முதல் நாளே தாமதம் ஆகி உள்ளது.
ஆட்சியர்
இது தொடர்பான தகவல் உடனே மாவட்ட ஆட்சியருக்கு சென்றது. இந்த நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வந்தது. ஆனால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தாமதமாக வந்த நகராட்சி அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.