உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் தன்னுடைய தாய் தனக்குப் பிடித்தமான உணவை சமைக்காததால், தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 16 வயது சிறுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்திருப்பதாவது, “வியாழக்கிழமை அன்று சிறுமி தனக்கு பிடித்த உணவை தனது தாய் செய்து கொடுக்காத காரணத்தினால், தாயுடன் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இந்த சிறுமி, இரவு உணவு கூட உட்கொள்ளவில்லை.
தனது தாயிடம் கோபித்துக் கொண்ட அவர் அறைக்குள் சென்று கதவை பூட்டி விட்டார். முதலில் குடும்பத்தார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல மணி நேரம் ஆகியும் அந்த சிறுமி அறையை விட்டு வெளியே வராததால், அச்சமடைந்த குடும்பத்தினர் கதவைத் திறந்து பார்த்தனர்.அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே மருத்துவமனைக்கு அந்த சிறுமியை கொண்டு சென்றனர்.அப்போது மருத்துவர்கள் அந்த சிறுமி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.” என்றார்.