வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 2008 ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் வகையில், இந்தியா ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அல்கொய்தா தடை கமிட்டி முன்பு, சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு இந்தியா ஆதரவு அளித்தது. சஜித் மிர்ரின் சொத்துகளை முடக்கம், வெளிநாடுகளுக்கு செல்ல தடை, ஆயுதங்கள் கிடைக்க தடை உள்ளிட்டவை அமெரிக்காவின் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. அவனது தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாகவும் அளித்திருந்தது. ஆனால், இந்த தீர்மானத்தை, சீனா தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்துள்ளது.
சர்வதேச நிதிக்குழுவின் ‘கிரே பட்டியலில்’ உள்ள பாகிஸ்தான், அதில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த ஜூன் மாதம், பயங்கரவாத நிதியுதவி வழக்கில் சஜித் மிர்ருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை பெற்று தந்தது. ஆனால், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான, சஜித் மிர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கடந்த மாதம் ஜெயிஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சகோதரன் மற்றும் சில பயங்கரவாதிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு சீனா தடை விதித்திருந்தது. ஜூன் மாதம், அப்துல் ரஹ்மான் மக்கி என்ற பயங்கரவாதிக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கும் சீனா முட்டுக்கட்டை போட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement