லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரேநாளில் வெளுத்து வாங்கிய மழையில் வீடுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். வடமாநிலங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு கனமழை காரணமாக லக்னோவில் உள்ள வில்குஷா எனும் பகுதியில் ராணுவ வளாகத்தின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுவருக்கு அருகே குடிசைகள் கட்டி வாழ்ந்து வந்த 9 பேர் உயிரிழந்தனர்.
உன்னாவ் மாவட்டத்தில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதேபோல பல்வேறு மாவட்டங்களில் மண் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள், முதியவர்கள் என 22 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள 75ல் 74 மாவட்டங்களில் நேற்றைய தினம் மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பாராப்பங்கில் 19 செ.மீ. மழை கொட்டியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. ஒரேநாளில் வழக்கத்தைவிட 400 சதவீதம் கனமழை பெய்ததே உயிரிழப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கனமழையால் பலியான கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.