எஸ்.சி.ஓ., மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை| Dinamalar

சமர்கண்ட்-”இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டில் 7.5 சதவீதத்தை எட்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையும், ஒத்துழைப்பும் ஏற்படுவதை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்,” என பிரதமர் மோடி பேசினார்.

நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மாநாடு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நேற்று துவங்கியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஆன்லைன்’ வாயிலாகவே நடந்த இந்த மாநாடு, இந்தாண்டு நேரடியாக நடக்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜிங்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு டில்லியில் இருந்து புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, நள்ளிரவில் அங்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:கொரோனா தொற்று பரவலுக்குப் பின், சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதை சீரமைப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.கொரோனா பரவலும், உக்ரைனில் நடக்கும் போரும், சர்வதேச அளவிலான பொருட்களின் வினியோக சங்கிலியில் தடைகளை ஏற்படுத்தின. இதனால் உலகம் முழுதும் உணவு பாதுகாப்பிலும், எரிசக்தி துறையிலும் நெருக்கடி உருவாகி உள்ளது. எனவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சீரான வினியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையும், ஒத்துழைப்பும் ஏற்படுவதை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.குடிமக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மிகப் பெரிய கடமை, அரசுகளுக்கு உள்ளது. இதில், பெரும் சவால்கள் எழுந்துள்ளன.

சிறு தானியங்களின் விளைச்சலையும், அதன் நுகர்வையும் ஊக்குவிப்பது தான் இதற்கான ஒரே தீர்வு. இதற்கான முயற்சியில் அனைத்து நாடுகளும் இறங்க வேண்டும். உணவுப் பொருள் நெருக்கடிக்கு இது ஒரு சரியான மாற்றாக இருக்கும். இது, ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம். எனவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில், சிறு தானிய உணவுத் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அதிலிருந்து சர்வதேச பொருளாதாரம் மீண்டு வர, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியது.

இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றுவதில் நல்ல வளர்ச்சியை அடைந்து உள்ளோம். இந்தியாவின் திறமையான இளம் தொழிலாளர்கள், எங்கள் நாட்டை இயற்கையான போட்டியாளராக உருவாக்கி உள்ளனர். இந்தாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். இந்த 7.5 சதவீத வளர்ச்சி என்பது, சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளின் வளர்ச்சியில் முதன்மையானதாக இருக்கும்.

latest tamil news

நந

அதேபோல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம். இந்தியாவில் தற்போது 70 ஆயிரம் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த விஷயத்தில், எங்கள் அனுபவத்தை மற்ற உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம். உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்தில் துவக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்தால் நிறுவப்பட்டுள்ள உலகின் ஒரே பாரம்பரிய மருத்துவ மையம் இது. பாரம்பரிய மருத்துவம் தொடர்பான விஷயங்களை, உறுப்பு நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.