ஓய்வுக்கால முதலீடுகளும் வருமான வரி சேமிப்பும்..!

நம்மில் பெரும்பாலானோர் எந்த முதலீட்டை மேற்கொண்டாலும் அதில் வருமான வரியை மிச்சப்படுத்த வழி இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில், ஓய்வுக்கால முதலீடும் விதிவிலக்கு அல்ல.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/

வரிச் சலுகை அளிக்கும் ஓய்வுக்கால முதலீடுகள்…

ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டில் வருமான வரியை மிச்சப்படுத்த கீழ்க்கண்ட திட்டங்கள் உதவும்.

1. விருப்ப பிராவிடன்ட் ஃபண்ட் (VPF), 2. பொதுமக்களுக்கான பிராவிடண்ட் ஃபண்ட் (PPF), 3. பென்ஷன் மியூச்சுவல் ஃபண்ட் – வரிச் சலுகை திட்டம், 4. நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS), 5. வரிச் சலுகை அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் (ELSS) ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்தத் திட்டங்கள் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

வி.பி.எஃப்…

சம்பளத்தில் இ.பி.எஃப் சந்தா பிடிக்கப்படுபவர்கள் கூடுதல் வரிச் சலுகை பெற மற்றும் ஓய்வுக்காலத்தில் அதிக தொகுப்பு நிதியைச் சேர்க்க விருப்ப பிராவிடன்ட் ஃபண்ட் என்கிற வி.பி.எஃப்பில் முதலீடு செய்து வரலாம். ஒருவர் அவரின் பணியாளர் பி.எஃப் போக, மீதி உள்ள முழு சம்பளத் தொகையையும்கூட வி.பி.எஃப்பாக முதலீடு செய்ய முடியும்.

தனியார் நிறுவனங்களில் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் (Basic Salary) மற்றும் பஞ்சப்படியில் (Dearness Allowance – DA) 12% அல்லது கட்டாய பி.எஃப் திட்டத்தின் மூலம் கீழ் ரூ.1,800 பி.எஃப்பாக சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது.

2014, செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு முதன்முதலாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.15,000-க்கு மேல் சம்பளம் இருந்தால், அவர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் பெறும் தகுதியில்லை. இவர்களுக்குக் கட்டாய பி.எஃப் ரூ.1,800 மற்றும் நிறுவனம் அதன் பங்களிப்பாகச் செலுத்தும் ரூ.1,800 ஆகிய இரண்டும் உறுப்பினரின் பி.எஃப் கணக்கில் சேர்க்கப் படும். இவர்களுக்கு பணி ஓய்வின்போது பி.எஃப் பென்ஷன் கிடைக்காது. இதுபோன்றவர்கள் பணி ஓய்வின்போது அதிக தொகை பெற விரும்பினால் வி.பி.எஃப் மூலம் பி.எஃப் தொகையை அதிகரித்துக்கொள்ள முடியும்.

இப்படி அதிகரிக்கப்படும் வி.பி.எஃப் தொகைக்கும் வருமான வரிப் பிரிவு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. மேலும், இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.1% வட்டி வருமானம் கிடைப்பதுடன், பின்னர் பி.எஃப்பில் இருந்து பணத்தைத் திரும்ப எடுக்கும்போது நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகையும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் தங்களின் ஓய்வுக்கால முதலீட்டுத் தொகையை வி.பி.எஃப் மூலம் அதிகரித்துக்கொள்வது லாபகரமாக இருக்கும்.

பி.பி.எஃப்…

நாட்டு மக்கள் அனைவரும் இந்த ஓய்வுக்காலத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். நிதி ஆண்டில் செய்யப்படும் முதலீட்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை இருக்கிறது.தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டாம் என்பது இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சமாகும்.

என்.பி.எஸ்…

அண்மைக் காலமாக, என்.பி.எஸ் திட்டம் மிகவும் பிரபலமாகி வருகிறது. காரணம், இந்தத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொது மக்கள் அனைத்துத் தரப்பினரும் முதலீடு செய்து வருவதாகும்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சத்துக்குமேல் கூடுதலாக வரிச்சலுகை பெற விரும்பினால், என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம், முதலீட்டாளரின் 60 வயதில் ஓய்வுக்கால தொகுப்பு நிதி மற்றும் பென்ஷன் கிடைக் கும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

என்.பி.எஸ் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் ரூ.1.50 வரை வருமான வரிப் பிரிவு 80சி.சி.டி1-ன்கீழ் வருமான வரிச் சலுகை கிடைக் கும். இந்தச் சலுகை அனைத்து மாதச் சம்பளம் வாங்குவோருக் கும் தொழில்முனைவோருக்கும் கிடைக்கும்.

ஒருவரின் மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 10% மட்டுமே என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். அது 80சி உச்சவரம்பான ரூ.1.50 லட்சத்துக்கு உட்பட்டது.

இது இல்லாமல் 80சிசி (1பி)-யின் கீழ் இந்திய குடிமகன்கள் அனைவரும் ஆண்டுக்கு ரூ.50,000 என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்து வருமான வரிச் சலுகை பெற முடியும். இந்த இரு பிரிவு களின்கீழ் ஒருவர் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வருமான வரி சலுகை பெற முடியும்.

இவை தவிர, நிறுவனத்திலிருந்து ஒருவரின் மாத அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதத்தை என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்தால், வருமான வரி பிரிவு 80சிசிடி 2-ன் கீழ் சம்பளதாரருக்கு இந்தத் தொகைக்கும் வருமான வரிச் சலுகை பெறலாம். இதற்கு உச்ச வரம்பு கிடையாது.

டயர் II – டிடிஎஸ் கணக்கில் மத்திய அரசு ஊழியர்கள் முதலீடு செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு வருமான வரிச் சலுகை உண்டு. இந்த முதலீட்டுக்கு லாக்இன் பீரியட் மூன்று ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு எப்போது வேண்டு மானாலும் முதலீட்டை எடுத்துக் கொள்ளலாம்.

என்.பி.எஸ் டயர் 1 ஈக்விட்டி ஆப்ஷன் முதலீட்டுப் பிரிவு, செப்டம்பர் 6, 2022 நிலவரப்படி, கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் தந்துள்ளது.

பென்ஷன் மியூச்சுவல் ஃபண்ட்…

யு.டி.ஐ ரிடையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் ஃபண்ட் (UTI Retirement Benefit Pension Fund – UTI-RBP), ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான் (Franklin India Pension Plan) திட்டங்களில் செய்யப் படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை உண்டு.

இந்த ஃபண்டின் லாக்இன் பீரியட் ஐந்து ஆண்டு காலம் ஆகும். முதலீடு செய்து 5 ஆண்டுகள் அல்லது ஓய்வு வயது எது முந்துகிறதோ, அது லாக்இன் பீரியட் ஆகும். இந்த ஃபண்டின் ரிஸ்க் ‘மாடரேட்லி ஹை’ ஆகும்

இந்த ஃபண்டுகளில் முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் 40% தொகை நிறுவனப் பங்குகளிலும் மீதி கடன் சந்தை சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட் கடன் ஃபண்டுகளின்கீழ் வருகிறது. அந்த வகையில் மூலதன லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20% கட்ட வேண்டும். அந்த வகையில், குறைவான வருமான வரி கட்ட வேண்டிவரும் என்பதால், ஓய்வுக்கால சேமிப்புக்கான தொகையில் ஒரு பகுதியை இந்த ஃபண்டு களில் முதலீடு செய்து வரலாம்.

இ.எல்.எஸ்.எஸ் ஃப்ண்ட்…

மியூச்சுவல் ஃபண்டின் ஒரு முக்கியமான வகையான இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச் சலுகை இருக்கிறது. இந்த ஃபண்டின் லாக்இன் பீரியட் மூன்று ஆண்டுகள் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் பிளான் என்பது ஹைபிரிட் ஃபண்டாகவும், இ.எல்.எஸ்.எஸ் என்பது பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டாகவும் இருக்கிறது.

2022 செப்டம்பர் 6-ம் தேதி நிலவரப்படி, இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டின் சராசரி வருமானம் கடந்த மூன்றாண்டில் 20%, ஐந்தாண்டில் 11.5% மற்றும் பத்தாண்டில் 19.5 சதவிகிதமாக உள்ளது. ஐந்தாண்டுகளில் டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளின் வருமானம் 15 – 24 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில், வரிசேமிப்பு பென்ஷன் பிளான் களின் சராசரி வருமானம் கடந்த மூன்றாண்டில் 10.5%, ஐந்தாண்டில் 7% மற்றும் பத்தாண்டில் 9.85 சதவிகிதமாக உள்ளது. இந்த வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை என்றாலும், முதலீட்டைத் தேர்வு செய்ய இதை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொள்ளலாம்.

வருமானத்தை எடுத்துக்கொண்டால், மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் பிளான்களைவிட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் மிக அதிகமாக வருமானம் தந்திருக்கின்றன என்பதால், அதை முதலீட்டுக்கு வரிச் சலுகை எதிர்பார்ப்பவர்கள் ஓய்வுக்கால முதலீட்டுக்குத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். மேலும், இந்த ஃபண்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரியில்லை. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.

எனவே, ஓய்வுக்கால முதலீட்டுக் காலம் ஐந்தாண்டு களுக்கு மேற்படும்போது தாராளமாக வரிச் சலுகை மற்றும் வரி அனுகூலம்கொண்ட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டை ஒருவர் தாராளமாகத் தேர்வு செய்யலாம். இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டை அதன் லாக்இன் பீரியட் முடிந்தபிறகு அது ஓப்பன் எண்டெட் ஃபண்டாக மாறும். அதன் பிறகு, எப்போது வேண்டுமானாலும் அதன் யூனிட்டுகளை விற்று, பணமாக்கிக்கொள்ள முடியும்.

(திட்டமிடல் தொடரும்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.