கோவை: கோவை தெற்கு தொகுதி குறித்து மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு இப்போதுதான் நியாபகம் வந்துள்ளது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின் நகர் அங்கன்வாடியில் மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணி நிகழ்ச்சியை இன்று (செப்.17) தொடங்கி வைத்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர், மாவட்டத்தில் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களை சீரமைத்து, தேவையான உதவிகளை 4 மாதங்கள் மேற்கொள்ள மகளிரணி சார்பில் திட்டமிட்டுள்ளோம். இதேபோல, நாடுமுழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை தத்தெடுத்து சேவையாற்ற முடிவு செய்துள்ளோம். மேலும், மாநகர், மாவட்டம் முழுவதும் கட்சியின் இளைஞரணி சார்பில் பல்வேறு இடங்களில் ரத்ததானம், அன்னதானம், மருத்துவ முகாம்கள், கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும்.
ஓராண்டுக்கு பிறகு மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை தெற்கு தொகுதி குறித்து நியாபகம் வந்துள்ளது. அவர், மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதை வாங்கிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பிரச்சினையை தீர்க்கலாம் என நினைக்கக் கூடாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனில், நேரடியாக களத்துக்கு வந்து தான் செய்யும் பணிகளை மக்களிடம் சொல்லட்டும். மக்களுக்கு சேவையாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. இப்போதாவது கோவை தெற்கு குறித்து அவருக்கு நியாயம் வந்ததை நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன்.
ஆ.ராசா பேசிய பேச்சுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா, திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.,யுமான ஆ.ராசா சட்டத்துக்கு எதிரான வகையில் பேசியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென அனைத்து இடங்களிலும் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான பேச்சுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து ரசிப்பதை கண்டிக்கிறேன். இதற்கென உரிய விளக்கத்தை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.