அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆர்.எஸ்.பாரதி கருணாநிதி வீட்டில் கொத்தடிமை வேலை செய்தார். அதன் காரணமாக அவருக்கு பதவி என்ற பிச்சை கொடுக்கப்பட்டது. அதன் மூலம் வெளியே தெரிந்தவர் தான் ஆர்.எஸ்.பாரதி. இன்று அவர் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் வழக்கறிஞராக இருந்து சேர்த்து வைத்த சொத்துக்களா?.. அது பற்றிய விவரங்களை வெளியிட முடியுமா?
ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தை எவ்வளவு மோசமாக பேசினார் என்பது நாடே அறியும். வயதான காலத்தில் அவர் ஓய்வு பெற்று விட வேண்டும். ஆனால் அவர் வாய்க்கு வந்தபடி உளறி விட்டு இருக்கிறார். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சனம் செய்வது அவருக்கு வாடிக்கையாக மாறிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி எல்லாவிதமான பதவிகளையும் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்தவர்.
வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால், நாங்கள் நூறு வார்த்தை பேச முடியும். எங்களுக்கு எப்படி வார்த்தைகளை உபயோகிப்பது என்பது குறித்து தெரியும். நாங்கள் அரசியல் பண்பாடு கருதி அதை உபயோகப்படுத்த மாட்டோம். மு.க.ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் இவ்வாறு பேசி வருகிறார்.கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுகவை அச்சுறுத்த முடியாது. கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். கொடநாடு பற்றி கூறி பூச்சாண்டி காட்ட வேண்டாம்.
ஆரம்ப காலத்தில் கருணாநிதியின் குடும்ப சொத்து எவ்வளவு? தற்போது குடும்ப சொத்து எவ்வளவு இருக்கிறது?… இன்று அவர்கள் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம். அதை ஒத்துக் கொள்கிறீர்களா இல்லையா? ஒரு வசனகர்த்தாவாக இருந்து திரைப்படத்துறையில் வந்து இவ்வளவு சொத்துக்கள் சம்பாதிக்க முடியுமா அப்படி என்றால் அவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது… 13 அமைச்சர்களின் மீது ஊழல் பட்டியல் இருக்கிறது. அதை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அமைச்சரவையில் பதவி பெற வேண்டும் என்றால் அவர்கள் ஊழல் மற்றும் குற்றம் செய்திருக்க வேண்டும் இதுதான் அமைச்சராவதற்கு முதன்மை அடிப்படை தகுதியாக இருக்கிறது” என்றார்.