சிறுத்தைகள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு – கூண்டை திறந்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி!

இந்தியாவில் சிறுத்தை (Cheetah) இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1952ஆம ஆண்டு அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட ஆக்கிரமிப்பு  காரணமாக சிறுத்தை இனம் இந்தியாவில் அழிவை கண்டது. ஆசியாவிலேயே இந்தியாவில் மட்டும் காணப்பட்ட இந்த சிறுத்தை இனம் அழிந்து சுற்றுச்சுழலின் உணவு சங்கலி பாதிக்கப்பிற்கு உள்ளாகலாம் என சூழலியல் வல்லுநர்கள் கூறி வந்தனர். 

இதை தொடர்ந்து, அரை நூற்றாண்டுகள் கழித்து இந்தியாவில் மீண்டும் சிறுத்தை இனத்தை கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி ‘Project Cheetah’ என்ற திட்டத்தை, இந்திய அரசு கொண்டவந்தது. அதில், நமீபியா நாட்டில் இருந்து சிறுத்தைகளை கொண்டுவந்து, இந்தியாவில் அதன் இனத்தை பெருக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. 

இதற்காக, இங்கு அவை வாழ்வதற்கான தகுந்த சூழல் உள்ள இடத்தை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு நீண்ட காலமாக ஈடுபட்டது. அதில், மத்திய பிரதேசத்தில் உள்ள குணே தேசிய பூங்கா சிறுத்தைகள் வாழ தகுதியான இடமாக கண்டறியப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில், நம்பீயா அரசுடன், இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டது. அதன்மூலம், நமீபியாவில் இருந்து 5 பெண் சிறுத்தைகள், 3 ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் தனி விமானம் மூலம்  இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி இன்று (செப். 17) நாட்டிற்கு அர்ப்பணிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, அவரது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேசம் வந்தடைந்தார். மேலும், தனி விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகருக்கு சிறுத்தைகள் முதலில் கொண்டு வரப்பட்டன. பின்னர், குணே தேசிய பூங்காவிற்கு அழைத்துவரப்பட்டது. அந்த சிறுத்தைகளுக்கு ரேடியா காலர்கள் பொருத்தப்பட்டு, அவை செயற்கைகோள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன. அதனை 24 மணிநேரமும் கண்காணிக்க தனிக்குழு ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிறுத்தைகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை திறந்துவிட்டு, பிரதமர் மோடி அவற்றை நாட்டிற்காக அர்ப்பணித்தார். முதலில், ஒரு கூண்டின் இரண்டு அறைகளில் இருந்த இரண்டு சிறுத்தைகள் அவர் திறந்துவிட்டார். பின்னர், 70 மீட்டர் தூரத்தில் மற்றொரு சிறுத்தை அவர் திறந்துவிட்டார். சிறுத்தைகளின் கூண்டிற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறுத்தைகளை திறந்துவிட்ட மோடி, பின்னர் தனது கேமராவில் அவற்றில் புகைப்படம் எடுத்தார். 

இந்தியாவில் திறந்தவெளி காடுகள் மற்றும் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கு சிறுத்தைகள் உதவிகரமாக இருக்கும்.  பல்லுயிர் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, கார்பன் சுரப்பு மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளை  மேம்படுத்தவும் அவை துணையாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.