இந்தியாவில் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்டது. சிவிங்கி புலிகள் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. 1948ஆம் ஆண்டில் இந்தியாவின் கடைசி சிவிங்கி புலி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவிங்கி புலிகள் இனத்தை பெருக்கும் நோக்கில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிவிங்கிகளை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
நமீபியாவில் இருந்து இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகள், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை பிரதமர் மோடி தனது பிறந்தநாளான இன்று விடுவித்துள்ளார்.
இந்த சிவிங்கி புலிகளை பலரும் சிறுத்தை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும்போது, எப்படி சிறுத்தை இனம் அழிந்து போனதாக கூறுகிறார்கள் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அதற்கு காரணம் சிறுத்தைகளையும், சிவிங்கி புலிகளையும் ஒன்று என நினைப்பதுதான். பார்ப்பதற்கு ஒன்று போல் இருந்தாலும், பூனை இனமான சிறுத்தைகளும், சிவிங்கி புலிகளும் வேறுவேறு விலங்குகள். ஆங்கிலத்தில் சிறுத்தைகள் leopard என்று அழைக்கப்படுகின்றன. சிவிங்கி புலிகள் Cheetah என அழைக்கப்படுகின்றன.
சிவிங்கி புலிகள் – Cheetah
பெரும்பாலும் ஆப்பிரிக்கா நாட்டின் சஹாராவின் தெற்குபகுதிகளில் புல் நிறைந்த வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க சிவிங்கி புலிகள் தலையில் இருந்து வால் வரை 3.3 அடி முதல் ஐந்து அடி வரை நீளம் கொண்டவை. 24 முதல் 32 அங்குலங்கள் வரை இதன் வாலின் நீளம் இருக்கும். வயது முதிர்ந்த சிவிங்கி புலிகள் எடை 34 கிலோ முதல் 56 கிலோ வரை இருக்கும். ஆண் சிவிங்கி புலிகள் அதிக எடையுடன் இருக்கும். மஞ்சள் கலந்த பழுப்பு நிற தோல் கொண்ட இவற்றின் உடலில் உள்ள புள்ளிகள் கறுப்பு நிறத்திலும் வட்ட வடிவிலும் இருக்கும்.
மெலிந்த உடலமைப்புடனும் நீண்ட கால்களுடனும் இருக்கும் சிவிங்கி புலிகள் மணிக்கு சுமார் 120 கி.மீ., வரை வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. இவற்றின் கண்களில் இருந்து வாய்ப்பகுதி வரை கறுப்புக் கோடு இருக்கும். முகம் வட்டவடிவில் இருக்கும். இவற்றின் வால், ஐந்து அல்லது ஆறு கருமையான வளையங்களால் சூழப்பட்ட முடிகளால் இருக்கும். பகலில்தான் இவை வேட்டையாடும். இவற்றால் மரங்களில் ஏற முடியாது.
ஆசிய சிவிங்கி புலிகள் இந்தியாவில் காணப்பட்டன. ஆனால் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை அவற்றின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. அவை 1952 இல் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது, மிகவும் ஆபத்தான நிலையில் இதன் துணை இனங்கள் ஈரானில் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
சிறுத்தைகள் – leopard
சிங்கம், புலிகள் மற்றும் ஜாகுவார்களுடன் நெருங்கிய தொடர்புடையவை பெரிய சக்திவாய்ந்த பூனை இனமான சிறுத்தைகள். Panthera pardus என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் சிறுத்தைகள் சஹாராவின் தெற்குபகுதிகள், வடகிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, இந்தியா மற்றும் சீனாவில் காணப்படுகின்றன. எண்ணிக்கையின் அடிப்படையில் ஆப்பிரிக்காவுக்கு வெளியே வாழும் சிறுத்தை இனங்கள் ஆபத்தில் இருப்பதாக நேஷனல் ஜியோகிராஃபிக் கூறுகிறது. அதாவது அந்த இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைகள் பெரிய பூனை வகையின் மிகச்சிறிய உறுப்பினர்களாக உள்ளன. மஞ்சள் நிறத் தோல் கொண்ட இவற்றின் உடம்பிலும் கறுப்பு நிற வளையங்கள் இருக்கும். ஆனால் அவை முழு வட்ட வடிவில் இல்லாமல் ஆங்காங்கே உடைந்து இடைவெளியுடன் இருக்கும். வட்டத்தின் நடுவில் அடர்த்தியான பழுப்பு நிறம் இருக்கும். அதிகபட்சமாக ஆறு அடி வரை வளரக்கூடியவை. மழைக்காடுகள், பாலைவனங்கள், வனப்பகுதிகள், புல் நிறைந்த வனப்பகுதி காடுகள் அல்லது மலைகள் என எந்த வகையான வாழ்விடத்திற்கும் தகுந்தாற்போல் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும்.
பருத்த உடலுடனும் குட்டையான கால்களுடனும் இருக்கும் சிறுத்தைகள், மரங்களில் எளிதாக ஏறிவிடும். பெரும்பாலான நேரத்தை மரத்தின் மீதே கழிக்கும். வேட்டையாடிய இரையை மரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று சாப்பிடும். இரவு நேரங்களில் வேட்டையாடும். 21 முதல் 60 கிலோ வரை இருக்கும் சிறுத்தைகள், மணிக்கு சுமார் 58 கி.மீ., வேகத்தில் ஓடக் கூடியவை.
இந்தியாவில், சிறுத்தைகளின் எண்ணிக்கை மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவாவில் பரவியுள்ளது. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட டிசம்பர் 2020 அறிக்கையின்படி, அவற்றின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.