பாலிவுட்டில் வளர்ந்து வந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து போனார். தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
“சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்திதான் தற்கொலைக்குத் தூண்டினார். சுஷாந்தின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடியை எடுத்துக்கொண்டார்!” என சுஷாந்த் சிங்கின் தந்தை வெளிப்படையாகவே புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சிபிஐ வழக்கு பதிவு செய்த பிறகு அமலாக்கப்பிரிவும் ரியா சக்ரபோர்த்தி மீது பணமோசடி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.
இது தவிர தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் ரெய்டு நடத்தினர். இதில் சுஷாந்த் சிங்கிற்கு ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ரியா சக்ரபோர்த்தியும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில்தான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அவர் கொலைதான் செய்யப்பட்டுள்ளார் என்று நடிகர் ஆமிர் கானின் சகோதரர் பைசல் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சுஷாந்த் சிங் கொலைதான் செய்யப்பட்டார் என்று எனக்குத் தெரியும். இந்த வழக்கு திரும்பத் திறக்கப்பட்டு விசாரிக்கப்படுமா என்று தெரியாது. அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். பல விசாரணை ஏஜென்சிகள் இவ்வழக்கை விசாரித்து வருகின்றன. ஆனால், சில உண்மைகள் இன்னும் வெளியில் வரவில்லை. அந்த உண்மைகள் வெளியில் வந்து அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். பைசல் கானும் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
சுஷாந்த் சிங் புகைப்படம் சமீபத்தில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சுஷாந்த் சிங் சகோதரி, மீது சிங் தயாரிப்பாளர் கரண் ஜோஹரை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் சுஷாந்த் சிங் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, “சுஷாந்த்தின் ‘பிரம்மாஸ்திரா’ இந்த பாலிவுட்டையே அழிக்க போதுமானது. பாலிவுட் எப்போதுமே பொதுமக்களைக் கட்டுப்படுத்தவே விரும்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.