அமெரிக்கக் கடலோர காவல்படை கப்பலான யுஎஸ்சிஜிசி மிட்ஜெட் (United States Coast Guard Cutter Midgett) சென்னை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. நான்கு நாள் பயணமாக சென்னை வந்துள்ள இந்த மிட்ஜெட் கப்பல், செப்டம்பர் 16 முதல் 19 வரை துறைரீதியான இருதரப்பு துறைமுக மற்றும் கடல்சார் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. மேலும், நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை இரு நாடுகளின் கடலோர காவல்படையினர் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான 75 ஆண்டு கால நம்பிக்கை மிகுந்த கூட்டைக் குறிக்கும் வகையிலும், அமெரிக்க மற்றும் இந்திய கடலோர காவல்படைகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த மிட்ஜெட்டின் பயணம் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் போது பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்திய கடலோர காவல்படையினருடனான சந்திப்புகள் மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து மாலத்தீவுக்கும் மிட்ஜெட் செல்லவுள்ளது. யூஏஎஸ் ஸ்கேன் ஈகிள் ட்ரோன், எம் எச்-65 ஹெலிகாப்டர் மற்றும் இதர அதிநவீன உபகரணங்களை கொண்டுள்ள யுஎஸ்சிஜிசி மிட்ஜெட் கப்பல், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ‘கேப்டன் வில்லி கார்மைக்கேல்’ தலைமையில் செயல்படுகிறது.
இந்த பிரமாண்ட யுஎஸ்சிஜிசி மிட்ஜெட்டை சென்னை துறைமுகத்திற்கு வரவேற்ற சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின், இது பற்றி கூறுகையில், “மிட்ஜெட்டையும் அதன் குழுவினரையும் சென்னைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ பசிபிக் நாடுகளில் ஒன்றாக இருப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. நமது முக்கிய நலன்கள் இப்பகுதியை சார்ந்துள்ளன. இந்தோ பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக இந்தியா திகழ்கிறது. மிட்ஜெட்டின் சென்னை பயணத்தின் போதான அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டுச் செயல்பாடுகள், சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ பசிபிக் பகுதிக்கான லட்சியத்தை நோக்கிய நமது உறவை மேலும் வலுவாக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான மிட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்:
யுஎஸ்சிஜிசி மிட்ஜெட் என்பது அமெரிக்க கடலோர காவல்படையின் புதிய ரக கட்டர் வகை கப்பல்களில் மிகப்பெரியது. இது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டது. 418 அடி நீளமும் 154 அடி மாஸ்ட் உயரமும் கொண்ட இந்த பிரமாண்ட கப்பலில் 120 மாலுமிகள், 23 அதிகாரிகள் என மொத்தம் 143 பணியாளர்கள் உள்ளனர். மறைந்த ரியர் அட்மிரல் ஜான் ஆலன் மிட்ஜெட் என்பவரின் நினைவாக இக்கப்பலுக்கு ‘மிட்ஜெட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1918ம் ஆன்டில் பிரிட்டிஷ் டார்பெடோ பீரங்கி மிர்லோவிடம் இருந்து 42 பணியாளர்களை வீரத்துடன் மீட்டதற்காக, உயிரைக் காப்பாற்றுவதற்கான அமெரிக்காவின் உயரிய விருதான தங்க உயிர்காக்கும் பதக்கத்தை மிட்ஜெட் பெற்றார். அவரது பெயர் சுமந்த இந்தக் கப்பல் சுமார் 170 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் தாங்கி செல்லும் திறன்கொன்டது.
அமெரிக்க கடலோரக் காவல்படையின் முக்கிய அங்கமாக திகழும் இந்த மிட்ஜெட், கடல்சார் உள்நாட்டுப் பாதுகாப்பு பணிகளை ஆதரிப்பது உள்ளிட்ட மிகவும் சவாலான செயல்பாடுகளில் ஈடுபடும் திறன் கொண்டது. மரபு வகை கட்டர் கப்பல்களுடன் ஒப்பிடும்போது, லெஜண்ட் கிளாஸ் நேஷனல் செக்யூரிட்டி கட்டர் எனப்படும் இக்கப்பல் அதிக வேகம், அதிக திறனோடு விளங்குவதோடு மட்டுமில்லாமல், விமான ஆதரவு வசதிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான தளம் ஆகிய பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளது. மேலும், சிறு படகுகளை மீட்கும் வசதியையும் இது கொண்டுள்ளது. சட்ட அமலாக்கம், பங்குதார முகமைகளுடனான செயல்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற முக்கியமான பணிகளுக்காகவும் இவை பயன்படுத்தபடுகின்றது.
இது தவிர, மிகவும் கடினமான கடல் சூழல்களிலும் எளிதாகச் செயல்படும் திறனைக் கொண்டுள்ள இக்கப்பலில் வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, தகவல் தொடர்பு வசதிகள், கணினிகள், நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் ஏராளமான நவீன உபகரணங்கள் போன்றவையும் இருக்கின்றன.