ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் ‘பைரேட்டஸ் ஆஃப் தி கரீபியன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். 59 வயதான இவர், 1983ஆம் ஆண்டு லோரி அன்னே அலிசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து, 1985இல், அவரை விவகாரத்து செய்த ஜானி டெப், ஏறத்தாழ 30 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார்.
2015ஆம் ஆண்டு, பிரபல ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்டு என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜானி டெப், அடுத்த 15 மாதங்களில் அவரையும் பிரிந்து விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஜானி டெப், ஆம்பர் ஹெர்டை விட 25 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவகாரத்திற்கு பின், ஆங்கில இதழ் ஒன்றில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சித்தரவதைகளை குறித்த கட்டுரை எழுதிய ஆம்பர் ஹெர்ட், அதில் ஜானி டெப் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். இதைத் தொடர்ந்து, தனக்கு அவப்பெயர் ஏற்படுதியதாகக் கூறி, ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணைதான் இணையத்தின் பேசுபொருளாக பல நாள்கள் நீடித்தது. வழக்கின் ஒவ்வொரு நகர்வும் தலைப்புச் செய்திகளாக்கப்பட்டன. தொடர்ந்து, மக்கள் அதை பின்தொடர்வதை அறிந்தகொண்ட பல்வேறு ஊடகங்கள், அது குறித்து தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தனர். கடந்த ஜூன் 1ஆம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஆம்பர் ஹெர்ட்டின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, 15 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 116 கோடி ரூபாய்) ஆம்பர் ஹெர்ட்டுக்கு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை திரைப்படமாக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Hot Take: The Depp/Heard Trial’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை, டூபி ஓடிடி மற்றும் மார்விஸ்டா ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் டூபி ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில், ஜானி டெப்பாக, நடிகர் ஹாப்கா ‘Days of our life’ புகழ்), ஆம்பர் ஹெர்ட்டாக மேகன் டேவிஸ் ஆகியோரும் நடிக்க உள்ளனர். ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேவும் என்ன நடந்தது என்பதை இந்த திரைப்படம் விவரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.