‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் நான்கு நாள் பயணத்தை முடித்த ராகுல், சென்ற செப்.11ஆம் தேதி கேரளாவில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்று தனது 10ஆவது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்றைய பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக, நேற்றிரவு மாதா அமிர்ந்தானந்தா மயி தேவியை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். கொல்லம் மாவட்டத்தின் கருணாநாகப்பள்ளி பகுதியில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ராகுல் காந்தி இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் ராகுல் தெரிவித்ததாவது,”கருநாகப்பள்ளி, கொல்லம் அருகே அமிர்தானந்தமயி மாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்தேன். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அம்மாவின் அமைப்பு செய்த அற்புதமான பணியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்து, பதிலுக்கு அவர்களது அன்பான அரவணைப்பை பெற்றேன்” என பதிவிட்டிருந்தார். மேலும், இது குறித்த புகைப்படங்களை, காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமிர்ந்தானந்தா மயி தேவி உடனான ராகுல் காந்தியின் சந்திப்பின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொடிக்குனில் சுரேஷ், கே. முரளிதரன், கே.சி. வேணுகோபால், கேரள சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் ஆகியோர் உடனிருந்தனர்.
கன்னியாகுமரியில் பயணம் செய்தபோது, கிறிஸ்துவ பாதிரியர் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் சந்தித்தார். ராகுல் – ஜார்ஜ் பொன்னையா சந்திப்பு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மாதா அமிர்ந்தானந்தா மயி தேவியை ராகுல் காந்தியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாள்களில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். 12 மாநிலங்களில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை அடுத்து கேரளா வந்துள்ள அவர், இங்கு 18 நாள்கள் நடைபயணத்தை மேற்கொள்கிறார். அதன்பின், செப்.30ஆம் தேதி கர்நாடகாவை அடையும் அவர், 21 நாள்கள் அங்கு நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து வட மாநிலங்கள் நோக்கி பயணிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.