தமிழகத்தின் 3வது பெரிய ஏரியாக 3,968 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது; பாலாற்றில் இருந்து தண்ணீர் வரத்தால் நிரம்பி வருகிறது காவேரிப்பாக்கம் ஏரி: மகேந்திரவாடி ஏரிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றம்

காவேரிப்பாக்கம்:  பாலாற்றில் தண்ணீர் வரத்து காரணமாக தமிழகத்தின் 3வது பெரிய ஏரியாக விளங்கும் காவேரிப்பாக்கம் பெரிய ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. இதில் ஆக்கிரமித்து 80 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் நீர்வரத்து காரணமாக காவேரிப்பாக்கம் ஏரியில் பொன்னபந்தாங்கல் பகுதியில் உள்ள 9 மதகுகளில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு 500 கன அடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றன. நீர் இன்றி அமையாது உலகு என்ற வள்ளூவரின் வாய்மொழிக்கேற்ப அக்கால அரசர்கள் மழை நீர் சேமித்து வைப்பதற்காக ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அமைத்துள்ளனர். இதேபோல் சாலையின் இருபுறமும் அரசுக்கு வருவாய் தரக்கூடிய வகையிலும், மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலும், புளிய மரங்களை நட்டு பராமரித்து வந்துள்ளனர்.

இந்த வகையில் தமிழகத்தில் செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரியை தொடர்ந்து, தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பெரிய ஏரி திகழ்கிறது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 3,968 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது.

இந்த ஏரியானது மூன்றாம் நந்திவர்ம பல்லவ அரசனால் கட்டப்பட்டுள்ளது. இவை சுமார் 900ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏரியாக விளங்கி வருகின்றன. இதற்கு நீர் ஆதாரம் பாலற்று அணையில் இருந்து பெறப்படுகின்றன. இந்த ஏரியை பற்றிய தகவலை மிஸ்டர் பரித்சுமித் என்பவர் 19ம் நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் நீர் பாசனம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏரியில் இருந்து நரிமதகு, சிங்க மதகு, கிழவன் மதகு, மூல மதகு, உள்ளிட்ட 10 மதகுகளின் மூலம் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவேரிப்பாக்கம், கட்டளை, கொண்டாபுரம், சேரி, ஈராள்சேரி, துறைப்பெரும்பாக்கம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்படுகின்றன. இதன் வாயிலாக சுமார் 6,278 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்யப்படுகின்றன.

இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த ஏரி கரையின் நீளம் சுமார் 8.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இதன் அகலம் 3.5 கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இக்கரையை பாதுகாக்க ஏரியின் உள் பகுதியில் பெரிய பெரிய பாறைகற்கள் கொண்டு பதிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிக்கரை பொதுப்பணித்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏரிக்கு பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் இரண்டு பக்கமும் கற்களால் பதிக்கப்பட்ட கரை அமைக்கப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஏரி நிரப்பப்படுகின்றன.  இப்படி  ஏரி நிரம்பும்போது ஏரியின் மொத்த கொள்ளவு உயரம் சுமார் 30.5 அடியாக இருக்கும். ஏரியானது ஒரு முறை நிரம்பி வழிந்தால் மூன்று போகம்  அறுவடை செய்யலாம் என்பது ஏரியின் சிறப்பு தன்மையாக விளங்கி வருகின்றன. இந்த ஏரியானது நிரம்பி வழியும்போது ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையற்ற உபநீர் கடை வாசல் பகுதியில் உள்ள 30 கண் கொண்ட ராட்சத மதகுகளின் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

இப்படி வெளியேற்றப்படும் தண்ணீர் சிறுவளையம், ரெட்டிவலம், உளியநல்லூர், புன்னை, ஜாகீர்தண்டலம், சயனபுரம், அசநெல்லிகுப்பம்,   தக்கோலம், உள்ளிட்ட 55-ஏரிகள் நிரம்பி, இறுதியாக கொசஸ்தலை ஆற்றில் கலக்கின்றன என்பது இந்த ஏரியின் மற்றொரு சிறப்பு தன்மையாக விளங்குகின்றன. இவை கடைசியாக கடந்த 2005-2006ல் நிரம்பியுள்ளது. அதன் பிறகு 9வருடங்கள் போதிய மழையின்மை காரணமாக கடும் வறட்ச்சியால் காணப்பட்டு வந்தன. பின்னர் கடந்த 2015ல் ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. அதன் பின்னர் 2020, 2021-ஆண்டுகளில் 29.2 அடி தண்ணீர் மட்டுமே நிரப்பப்பட்டன. அதன் முழு கொள்ளவு எட்டப்படாமல் திறந்து வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் அண்மையில் ஆங்காங்கே பெய்த கண மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வழிய தொடங்கின. இதன் காரணமாக பாலாற்றில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளன. இதனால் பாலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து ஏரிக்கு கால்வாய் மூலம் சுமார் 50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தன. இதனால் ஏரியில் தற்போது படிப்படியாக நீர் உயர்ந்து 29.2 அடியை எட்டியுள்ளது.  இதன் முழு கொள்ளவான 30.5அடியை தொட இன்னும் சில வாரங்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காவேரிப்பாக்கம் ஏரியில் பொன்னபந்தாங்கல் பகுதியில் உள்ள 9 மதகுகளில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு 500 கன அடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மகேந்திரவாடி ஏரி நிரம்பி வழிய தொடங்கி உள்ளது. இதனால் இதன் கீழ் பகுதியில் உள்ள சில ஏரிகளும் நிரம்பி வழிய தொடங்கி உள்ளன. இதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மணல் மூட்டைகள் ஜேசிபி உள்ளிட்வைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.    மேலும் ஏரியில் பயிரிட்டுள்ள வாழை மரங்கள் சுமார் 80 ஏக்கருக்கு மேல் நீரில் முழ்கியுள்ளன. இதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் வாழைக்காய், வாழைப்பூ, உள்ளிட்டவைகளை அறுவடை செய்து வருகின்றனர். இந்த ஏரியை பார்வையிட நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதன் ஏரி பகுதியில்  பாதுகாப்புக்காக போலீசார் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் தற்போது பாலாற்று பகுதியில் இருந்து ஏரி கால்வாயில் 500 கன அடியில் இருந்து 50 கன அடியாக தண்ணீர் குறைவாக வருகின்றன. இதனால் ஏரி எப்போதும் நிரம்ப வாய்ப்புள்ளது. ஆகையால் கால்வாயின் அருகே உள்ள பொது மக்களை உஷார்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் நெமிலி தாசில்தார் ரவி மற்றும் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சேரிஅய்யம்பேட்டை, துறைபெரும்பாக்கம், ஈராள்சேரி, உள்ளிட்ட கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்துள்ளனர்.  இந்த ஏரி நிரம்பியது  பொது மக்களுக்கும் விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.