சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என பாக்யராஜ் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வசந்தபாலன் ஏற்கெனவே இதுபோல் தெரிவித்திருந்தார். பாக்யராஜும் தமிழ் திரையுலகில் எழுத்தாளர்கள் தட்டுப்பாடு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
திரைக்கதை மன்னர்கள், ஜாம்பவான்கள் இருந்த தமிழ் திரையுலகம்
தமிழ் திரையுலகம் ஒரு காலத்தின் அதன் சிறந்த கதாசிரியர்களால் மிகவும் மதிக்கப்பட்டது. தமிழ் திரையுலகம் தாண்டி த்ன் இந்திய, பாலிவுட் பட உலகினராலும் மதிக்கப்பட்டது. புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர்கள் கருணாநிதி, கே.எஸ்.கோபாலகிருஷணன், ஜாவர் சீத்தாராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், விசு, பாரதிராஜா, பாக்யராஜ், லியாகத் அலிகான் என திரைக்கதைக்காக பாரட்டப்பட்டவர்கள் இருந்தனர்.
வலுவான கதைகளுக்காக பாராட்டப்பட்ட தமிழ் திரையுலகம்
வலுவான திரைக்கதை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து முதல்வரும் ஆனார் எம்ஜிஆர். அதற்கு அவர் நம்பியது வலுவான திரைக்கதை. திரைக்கதை இல்லாமல் ஒரு படத்தை யோசித்ததே இல்லை. தனது கதைக்காக இந்திய அளவில் பாராட்டப்பட்டார் பாக்யராஜ். இதுபோல் பலர் உள்ளனர். ஆனால் சமீப காலமாக குறிப்பிட்ட ஒரு சமபவத்துக்குள்ளேயே சுற்றிவரும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. கதை என்பது மருந்துக்குக்கூட இல்லாமல் ஒரிரு சமபங்களின் தொகுப்பாக திரைப்படங்கள் மாறி வருகிறது என திரைத்துறையில் உள்ள பலரது விமர்சனமாக உள்ளது.
கதாசிரியர் பஞ்சம் இரண்டாம் முறையாக சொன்ன பாக்யராஜ்
சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் தமிழ் திரையுலகில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது, கதாசிரியர்கள் இல்லாத நிலை உருவாகி வருகிறது என பேசியிருந்தார். இயக்குநர் வசந்தபாலனும் இதேபோன்றதொரு கருத்தை அழுத்தமாக வைத்திருந்தார். இயக்குநர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள், நடிகர்களுக்காக கதைகள் அமைக்கப்படுகிறது என கதாசிரியர் இல்லாதது குறித்து பேசியிருந்தார். இந்நிலயில் இன்று முதல்வரை சந்தித்தப்பின் இயக்குநர், கதாசிரியர், நடிகர் பாக்யராஜ் மீண்டும் அதே கருத்தை கூறியுள்ளார்.
கலைஞர் எழுத்தால் எம்ஜிஆர், சிவாஜி உருவாகினர்
முதல்வரை சந்தித்தப்பின் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கே.பாக்கியராஜ்.” கலைஞரின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. நான் தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன், என்னுடைய எழுத்தை அதிகம் மதித்தவர் அவர். கலைஞர் உடனான நட்பு பெரிது நீண்டகாலமாக தொடர்பில் இருந்தவர்.
திரைக்கதை என்றாலே கலைஞர்..எழுத்தாளர்களே இன்று இல்லாத நிலை
அதே போல் கலைஞர், எம்ஜி ஆர் ஆகிய இருவர் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான், தமிழ் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கலைஞர் பெயர். சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குனர்கள் படம் எடுக்கின்றனர், வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர்.
பான் இந்தியா படங்கள்
தமிழ் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும் இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். பான் இந்தியா படம், அதிக செலவில் எடுக்கப்படும் படம் என வன்முறைக்காட்சிகளின் தொகுப்பாக படங்கள் வெளிவருவதையே அவர் இவ்வாறு சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.