சென்னை: ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்த பழமொழியாக அரசியலில் நாகரீகமில்லாத வார்த்தைகளை பேசி வாங்கி கட்டி கொண்டு பதவிக்காக காத்திருக்கும் ஆர்எஸ் பாரதி நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுக குறித்து விமர்சனம் செய்துள்ளார் என்று சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். திமுக தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து அதன்பின்னர் கலைஞரால் அரசியலில் நுழைந்தார் என்று திமுகவை பற்றி காட்டமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்களும் திருப்பி பதிலடி கொடுப்போம் என்று திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கொத்தடிமையாக வேலை பார்த்த ஆர்எஸ் பாரதி தற்போது கோடிக்கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி? என்று கேட்ட அவர், நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தில் அவர் செய்த ஊழல் சொல்லி மாளாது என்றார். மேலும், நீதிமன்றத்தில் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் நீதிபதியாக இருப்பது நாங்கள் போட்ட பிச்சை என அவர் கூறியிருந்தார்.
அதிமுகவையும், எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் ஆர்எஸ் பாரதி, ஆனால் அன்னக்காவடியாக இருந்து வந்தவர் அல்ல எடப்பாடி பழனிச்சாமி. பியூசி படித்துவிட்டு, வசதியான குடும்பத்தில் பிறந்து கட்சியின் மீது கொண்ட ஈடுபாட்டால் அதிமுகவில் படிபடியாக முன்னேறியவர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சித்தார் ஜெயக்குமார்.
விமர்சிக்கும்போது வார்த்தைகளை பயன்படுத்துவதில் கவனம் தேவை என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவையும், எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதற்கான தக்க பதிலடி கொடுத்து கொண்டே இருப்போம் என்றும், திமுக காட்டும் பூச்சாண்டி வேலைகளை எவ்வளவோ பார்த்துவிட்டோம். அதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
கலைஞர் காலத்தில் இருந்தபோது சினிமா துறையில் நடந்த கபளிகர செயலை தற்போது சினிமா துறையில் உதயநிதி செயல்படுத்தி வருகிறார். 420, போர்ஜரி, சீட்டிங் செய்தவர்கள் தான் அமைச்சர் கேபினட்டில் இருக்கிறார்கள் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிகார போதையில், அதிகார திமிரில் தற்போது செய்யும் செயல்கள் அனைத்திற்கும் 2026 ஆம் ஆண்டு திமுக பதில் கூற வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
திமுகவின் ஊழல் மற்றும் கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் பற்றி அனைவருக்கும் தெரியும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோயம்பேடு செல்வராஜ், கேர் பிளாட்பாரத்தில் இருப்பவர்கள் போன்றோர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் நடுநிலையான போக்கில் காவல்துறை செயல்பட வேண்டுமே தவிர பழிவாங்கும் செயல்களில் ஈடுவடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வைத்திருந்தோம். தற்போது, காவல் துறை ஏவல் துறையென நீதிமன்றமே கூறியுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையை நியாயப்படுத்தும் ஓபிஎஸ் ஜெயலலிதா மரணத்தை நியாயபடுத்துகிறாரா? என அவர் தெரிவித்தார்.