திருச்சி அருகே 8 கிராமங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பது தவறான தகவல்: அமைச்சர் மஸ்தான் விளக்கம்

விழுப்புரம்: திருச்சி அருகே 8 கிராமங்கள் வக்பு போர்டுக்கு சொந்தம் எனத் தவறாக சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாமல் செல்கின்றனர். இதை உணர்ந்து,புதிதாக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 181பேரை வெளிநாட்டுக்கு அனுப்பிஉள்ளோம். அடுத்து இங்கிலாந்துக்கு 481 பேர் செவிலியர் பணிக்குசெல்ல உள்ளனர்.

மின்வெட்டு பரவலாக இருப்பதாக கூறுகின்றனர். ‘தலை உள்ளவரை சளி இருக்கும்’ என்பது போல ஆங்காங்கே மின்வெட்டு இருக்கத்தான் செய்யும், அதிமுகவினர் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக, தங்களின் ஊழல்களை மறைத்து இதை பெரிதுபடுத்தி, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். திராவிட மாடலைபாஜகவினர் குறை கூறுகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலையை உயர்கல்வி வரை படிக்க வைத்ததே இந்த திராவிட மாடல்தான்.

திருச்சி அருகே 8 கிராமங்கள் வக்பு போர்டுக்கு சொந்தம் எனத் தவறாக சொல்லப்பட்டுள்ளது. மொத்தமாக 8 கிராமங்களை குறிப்பிட்டு அப்படி சொல்லியிருக்கக் கூடாது. வக்பு போர்டுக்கு சொந்தமான இடங்கள் குறிப்பிட்ட கிராமத்திற்குள் இருக்கிறது என்றால் அந்த சர்வே எண்ணை குறிப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும்.

மறு ஆய்வுக்கு உத்தரவு: இது குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்குப் பின் அடையாளம் காணப்பட்ட சொத்துகள் எது எனதெரிந்த பின்பு அது வக்பு போர்டுக்கு முறையாக தெரியவரும். இதற்கிடையே குறிப்பிட்ட அந்த 8 கிராமங்களில் பத்திரப் பதிவு வழக்கம்போல் நடைபெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.