திருப்பூர்: திருப்பூரில் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பள்ளி சிறுவன், கேரளாவில் மீட்கப்பட்டான். திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் அண்மையில் ராகேஷ் என்ற கட்டிட கான்ட்ராக்டர் உடன் இணைந்து, 100 வீடுகள் கட்டி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக ராகேஷ் 38 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் சிவகுமாருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் 38 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் ராகேஷுக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டால் தமக்கு 5 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கும் என கூறி மீண்டும் சிவகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார் ராகேஷ். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிவகுமார் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர், சிவகுமார் அவரது மனைவி கவிதாவை கட்டிப்போட்டு வீட்டில் பணம், நகை உள்ளதா? என தேடி உள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்காத நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிவகுமாரின் 14 வயது மகன் பிரணவ் – ஐ கத்தி முனையில் பிடித்து 5 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து மகனை மீட்டுக்கொள் என கூறி கடத்தினர்.
ஆனால் சிறுவன் தப்பிக்க முயன்றபோது கடத்திய இருவரில் ஒருவர் அணிந்திருந்த முகமூடி விலகி ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் விடுதியில், சிறுவன் இருப்பது தெரியவந்த நிலையில், தமிழ்நாடு போலீசார் தகவலின் பேரில் சிறுவனை கொல்லம் போலீசார் மீட்டனர். சிறுவனை கடத்திய கட்டிட கான்ட்ராக்டர் ராகேஷ், தம்முடைய முகம் தெரிந்துவிட்டதால் போலீசில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.