‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை வெகுநாள்கள் நீடிக்கவில்லை. 2016 மே மாதம் ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் உடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து 2018-ல் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் ஒரு கட்டுரை எழுதினார். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஜானி டெப் பெயரைக் குறிப்பிடாமல் தன்னைக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்திக்கொண்டார். இது ஜானி டெப்பின் திரை வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இதன்பின் ஜானி டெப், கடந்த 2018ல் ஆம்பர் எழுதிய கட்டுரையின் மீது குற்றம்சாட்டி அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தீவிரமாக நடைபெற்றது வந்தது. இரு தரப்பிலும் ஏராளமான வாதங்களும் சாட்சிகளும் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த வழக்கில் ஜானி டெப் அவதூற்றுக்கு ஆளானதை நிரூபிக்க முடிந்தது என அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த ‘ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட்’ வழக்கு ஹாலிவுட் மட்டுமில்லாமல் உலகளவில் பெரும் பேசுபொருளாக இருந்தது. உலகெங்கும் பல யூடியூப் சேனல்கள் இந்த வழக்கின் விவாதத்தை லைவ்வாக டெலிகாஸ்ட் செய்தன.
இந்நிலையில் இந்த வழக்கை ‘Hot Take: The Depp/Heard Trial’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படம் புகழ்பெற்ற ஃபாக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘Tubi’ என்ற அமெரிக்கன் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தைச் சந்தா எதுவும் செலுத்தாமல் இலவசமாகவே பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஜானி டெப் கதாபாத்திரத்தில் மார்க் ஹாப்கா என்ற நடிகர் நடிக்கிறார். இவர் ‘பேரலல்ஸ்’, ‘டேஸ் ஆஃப் அவர் லைவ்ஸ்’ போன்ற படைப்புகளில் நடித்தவர். மேகன் டேவிஸ் என்பவர் ஆம்பர் ஹெர்டாக நடிக்கிறார். ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட்டின் வக்கீல் கதாபாத்திரங்களில் முன்னணி டிவி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தைத் தயாரித்து வரும் ஃபாக்ஸ் என்டர்டெயின்மென்ட்டுக்குச் சொந்தமான மார்விஸ்டா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை வேகமாக எடுத்து முடித்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டது. காரணம், இவ்வழக்கு குறித்த விவாதங்கள் இருக்கும்போதே படம் வெளியானால்தான் வரவேற்பைப் பெரும் என்பது அவர்களின் எண்ணமாகத் தெரிகிறது. ஏற்கெனவே ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த நிலையில், படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் இந்தப் படம் எந்த ஓ.டி.டி-யில் வெளியாகிறது என்பது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.