சென்னையில் ‘தேர்வு எழுத செல்’ என தாய் திட்டியதால் மனம் உடைந்த 11-ஆம் வகுப்பு மாணவன் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகர் டாக்டர் தாமஸ் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுமி. இவர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். சுமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து மகன் ஹரிஷ் உடன் வசித்து வருகிறார். 15 வயதான ஹரிஷ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஹரிஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பள்ளியில் தேர்வு இருந்ததால் அவருடைய தாயார் சுமி காலையில் எழுந்து “தேர்வுக்கு செல்” என ஹரிசை கண்டித்துள்ளார். இதில் மன வேதனை அடைந்த ஹரிஷ் வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுத செல்லுமாறு தாய் கண்டித்ததால் 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் இருப்பவர்கள், 104 எண்ணை தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM