புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 70 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நமீபிய நாட்டைச் சேர்ந்த சிறுத்தைகள் மீண்டும் வலம் வரவுள்ளன.
இதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) தலைவர் எஸ்.பி.யாதவ் கூறியது:
மத்திய பிரதேச மாநிலம் சியோபூரில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபிய நாட்டு சிறுத்தைகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடமாட உள்ளன.
நமீபியாவிலிருந்து சிறுத்தைகளை அழைத்து வருவதற்காக சிறப்பு சரக்கு விமானம் போயிங் 747 அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானத்தில் வனவிலங்கு நிபுணர்கள், கால்நடை மருத்துவர், மூன்று இந்திய விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறுத்தைகளை கொண்டு வருவதற்காகவே இந்த போயிங் விமானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன.
8 சிறுத்தைகளை ஏற்றிக் கொண்டு நமீபியாவிலிருந்து நேற்று மாலை கிளம்பிய சிறப்பு விமானம் இடையில் எங்கும் நில்லாமல் நேரடியாக குவாலியரை இன்று வந்தடைகிறது. அங்கு குடியேற்ற, சுங்க நடைமுறைகள் முடிக்கப்பட்ட பின்னர் விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக சிறுத்தைகள் பூங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளன.
நரேந்திர மோடியின் பிறந்தாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நமீபியா சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவிற்கு பிரதமர் அறிமுகம் செய்து வைப்பார்.
வன விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களில் மறுமலர்ச்சி மற்றும் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் வரவழைக்கப்படுகின்றன.
உலகில் மிக வேகமாக மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய விலங்கு சிறுத்தையாகும். இவற்றின் அழகிய வாழ்விடமாக குனோ தேசிய பூங்கா திகழும். விலங்கு களை வேட்டையாடுவதை தடுப்பதற்காக இந்த பூங்காவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சிறப்பான வகையில் செய்யப்பட் டுள்ளன.
ரேடியோ காலர் பொருத்தி சிறுத்தைகளின் நடமாட்டம் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.