சென்னை: நிபுணர் குழு அனுமதியளித்ததும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் இருந்தபடி, நேற்று காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனம், 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காசநோயாளிகளுக்கு சத்துணவு, சிகிச்சைக்கான மருந்து, தொழில்சார்ந்த உதவிகள் வழங்கும் வகையில் தத்தெடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 13 லட்சம் காசநோயாளிகள் உள்ளனர். இவர்களில் 9 லட்சம் பேர் தங்களை தத்தெடுப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேரை அரசுசாரா அமைப்புகள், தனிநபர்கள், சுயஉதவிக் குழுக்கள், மக்கள் பிரதிநிதிகள் தத்தெடுத்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் மூலமாக சத்தான உணவு, மருந்துகள் ஆகியவை தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதால், அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போட, நிபுணர்கள் குழு இன்னும் அனுமதி தரவில்லை. அனுமதி கொடுத்த பிறகு, அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
கரோனா பரவலுக்குப் பிறகு, ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், செப்.17 (இன்று) முதல் அக்.2-ம் தேதி வரை நாடு முழுவதும் ரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளது.
உக்ரைனில் மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்கள், இந்தியாவில் தங்கள் படிப்பைத் தொடர முடியாது. மருத்துவப் படிப்பைமுடித்து வந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால், இந்தியாவில் மருத்துவப் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.