திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் டிஜே பார்ட்டியில் தம்பதியாக வருபவர்களுக்கும், மகளிருக்கும் அனுமதி இலவசம் எனவும், இதில் மகளிருக்கு மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் அந்நிகழ்ச்சியை ரத்து செய்தும் தங்கள் கவனத்திற்கு இல்லாமல் விளம்பர பிரிவு சார்பாக வெளியிடப்பட்டிருந்ததாகவும் அது போன்ற நிகழ்ச்சி எதுவும் நடைபெறாது எனவும் எதிர்காலத்தில் இது போன்ற தவறு நடக்காது என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சமூக சீரழிவை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை மது போதைக்கு அடிமையாகி அதன் மூலம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் வகையிலும் அறிவிப்பு வெளியிட்ட தனியார் விடுதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதேபோல் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் திறப்பு விழா நடைபெற்றபோது அதில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். மேலும் இது திருச்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய ஒருவருக்கு சொந்தமானது எனவும், திருப்பூரை சேர்ந்த திமுக புள்ளிகள் பலருக்கும் தொடர்புள்ளது எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“திருப்பூர் மாநகராட்சி மங்கலம் சாலையில் TWIN BELLS என்ற உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றை கடந்த ஜூலை மாதம் 24-07-2022 ஆம் தேதி திறப்பு விழா செய்வதற்காக அழைக்கப்பட்ட போது சென்று திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்றேன்.
TWIN BELLS என்ற நிறுவனத்தால் தற்போது நடைபெறுகின்ற எந்த நிகழ்வுகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. நேற்று பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் வரும் 17-09-2022 அன்று டி.ஜே பொழுது போக்கு நிகழ்வு நடைபெறுவதாக செய்தி அறிந்து, உடனடியாக சமூக கலாச்சார சீர்கேட்டையும் , மாநகரத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெற இருக்கிற நடவடிக்கைகளை கண்டிக்கிறேன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
திருப்பூர் மாநகரின் மாண்புமிகு மேயர் என்ற முறையிலும், திருப்பூர் மாநகரத்தின் வளர்ச்சிக்கு, களங்கம் ஏற்படுத்துகிற நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில், திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை மேற்கொள்ள கடிதம் அளித்து, சமூக கலாச்சார சீர்கேட்டை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கவும், தமிழக அரசிற்கும் திருப்பூர் மாநகருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நிகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டேன்.
மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்கட்சிகள் விஷமச் செய்திகளை பரப்பி வருகின்றனர் . இதனை வன்மையாக கண்டிக்கிறேன் . திருப்பூர் மாநகராட்சியின் மேயராகிய நானும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசும் ஒரு போதும் இதுபோன்ற சமூக கலாச்சார சீரழிவுக்கு துணை போகமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு கூறிப்பிடப்பட்டுள்ளது