தென்காசி: பட்டியலின மக்களுக்கு மளிகை கடையில் பொருட்கள் வழங்க மறுப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்த பின்னணி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளத்தில் செயல்பட்டு வந்த பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஞ்சாங்குளத்தில் உள்ள கடைக்கு வந்த பள்ளி குழந்தைகளிடம் கடைக்காரர், “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். பள்ளிக்கூடத்திற்கு செல்லுங்கள். இனி தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. தின்பண்டம் கொடுக்க முடியது என்று சொல்கிறார்கள் என வீட்டிலும் சொல்லுங்கள். இனி கொடுக்க மாட்டோம். ஊரில் கட்டுப்பாடு வந்துள்ளது” என்று சொல்கிறார்.
ஊர்க் கட்டுப்பாடு
இதனை கேட்ட அந்த பிஞ்சு குழந்தை, என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறது. அதற்கு கடைக்காரர் உடனே, “கட்டுப்பாடு என்றால் ஊரில் ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கிறார்கள். உங்கத் தெருவில் யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாது” என்று கூறி அந்தக் குழந்தைகளை கடைக்காரர் திருப்பி அனுப்புகிறார். இதுதொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
5 பேர் மீது வழக்கு
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து சாதிய தீண்டாமை குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், முருகன், சுதா, குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
கிராமத்தில் போலீசார் குவிப்பு
இதனிடையே கிராமத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாஞ்சாங்குளம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய் துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு இரு தரப்பினர் இடையே சுமூக உடன்படிக்கை ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.
கட்டுப்பாட்டின் பின்னணி
இந்த நிலையில் திடீரென பட்டியலின மக்களுக்கு பொருட்கள் வழங்கக் கூடாது என்று ஊரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதுதொடர்பாக ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றொரு தரப்பினர் மீது அடிதடி வழக்கு பதிவானது.
முக்கிய முடிவு
இந்த விவகாரத்தில் சுந்தரையா என்பவரது மகன் மகேஷ்வரன் ஊர் நாட்டாமையாக செயல்பட்டுள்ளார். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மற்றொரு தரப்பினர் வைத்துள்ள கடைகளில் இருந்து பொருட்கள் வழங்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்தே மாணவர்கள் பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க வந்தபோது, மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.