இந்தியாவின் அரசியல் வரலாற்றை நரேந்திர மோடிக்கு முன்னர் நரேந்திர மோடிக்கு பின்னர் என்று பிரித்து குறிப்பிடும் அளவிற்கு ஒரு பெரிய வீச்சு அவரது அரசியல் பாணியில் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. மோடி அலையாக இருக்கட்டும், மோடி எதிர்ப்பாக இருக்கட்டும் எல்லாவற்றின் வீச்சுமே அதிகம்தான்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். குஜராத் மாநிலத்தில் ஓர் எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்று தன்னை இந்தியாவின் முகமாக நிலைநிறுத்திக் கொண்டிருப்பது வரை அவரது வாழ்க்கை வியத்தகு பயணம் என்பதில் சந்தேகமில்லை. 2014-ல் முதன்முறையாக அவர் பிரதமர் ஆன போது நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவர் ஆற்றிய உரையில் இருந்து மாதந்தோறும் மன் கி பாத் என்று அவர் முழங்கும் பேச்சுகள் வரை மேற்கோள் காட்ட ஆயிரமாயிரம் வரிகள் இருக்கின்றன. அவற்றில் 10 துளிகளைப் பகிர்கிறோம்.
1. ஜனநாயகத்தின் கோயிலில் நாம் நிற்கிறோம். உளத்தூய்மையுடன் இந்தப் பணியை மேற்கொள்வோம். பதவிக்காக அல்ல.. நாட்டு மக்களுக்காக செயல்படுவோம். வேலையும், பொறுப்பும் தான் மிக முக்கியமானவை. என் மீதான பொறுப்பை நான் ஏற்கிறேன். எனக்கு இந்தப் பிரதமர் பதவி முக்கியமானது அல்ல. ஆனால் அது எனக்கு அளித்துள்ள பொறுப்பு மிக முக்கியமானது (நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பிரதமர் ஆற்றிய முதல் உரை)
2. வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாரதத் தாய்க்கு சேவை செய்வோம். நமது தேசத்தை புதிய உச்சங்களை நோக்கி அழைத்துச் செல்வோம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு அடி முன்னேஎ வைத்தால் நாம் ஒட்டுமொத்தமாக 125 கோடி அடிகளை முன்னோக்கி வைத்ததற்கு சமம் (முதல் மன் கி பாத் உரை)
3. இந்த உலகமே இந்தியாவை ஒரு நம்பிக்கையுடன் பார்க்கிறது. உலக நாடுகளில் பரவி இருக்கும் இந்தியர்களுக்கு இந்தப் பார்வையை மேலும் விரிவடையச் செய்யும் பொறுப்பு இருக்கிறது.
4. இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் நம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது.
5. இந்தத் தேசத்தில் 80 கோடி இளைஞர்கள் இருக்கின்றனர். அதில் பெரும்பாலோனோர் 35 வயதுக்குக் கீழ் உள்ளோர். அவர்கள் திறன் வாய்ந்தவர்களாக உருவெடுத்தால் இந்த தேசத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். அதில்தான் நான் இப்போது எனது கவனத்தைக் குவித்துள்ளேன்.
6. மனிதநேயத்தின் மீது நம்பிக்கை உள்ளர்கள் ஒன்றிணைய வேண்டும். அவர்கள் அனைவருமே தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்.
7. இந்த தேசத்தின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் சூழலை உருவாக்கித் தர வேண்டும். 125 கோடி இந்தியர்கள் இணைந்தால் இந்த தேசத்தை மேலும் முன்னோக்கி அழைத்துச் செல்லலாம்.
8. அரசு திட்டங்கள் புதுடெல்லியில் மட்டுமே குவிக்கப்பட வேண்டியதில்லை. அதனால் தான் பல்வேறு மாநிலங்களிலும் முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
9. தோல்விகள் எப்போதும் நம் கற்றல் வழியில் முட்டுக்கட்டையாகிவிடக் கூடாது. நாம் நமது தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.
10. முதல் உலகப் போராக இருக்கடும், இரண்டாம் உலகப் போராக இருக்கட்டும் இந்தியா எந்த ஒரு தேசத்தையும் தாக்கியது இல்லை. எந்த ஒரு தேசத்தையும் கைப்பற்றும் நோக்கத்தோடு போர் தொடுத்தது இல்லை. ஆனால் நமது வீரர்கள் இரண்டு போர்களிலுமே மற்ற நட்பு நாடுகளுக்காகப் போராடி உயிர் நீத்தனர். அவர்களை இந்த உலகம் நினைவுகூர வேண்டும்.
மிக நீண்ட சுதந்திர தின உரை, பணமதிப்பிழப்பு அறிவிப்பு என பிரதமர் மோடியின் உரைகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் கவனம் பெற்றதாகவே அமைந்து வருகின்றன.
இன்று – செப்டம்பர் 17: பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்