சென்னை: கோவை ராஜவீதியில் உள்ள அரசு பள்ளிக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வருகை தந்த நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய கமல் நடிகர்களை ரசிகர்கள் ஊக்கப் படுத்துங்கள் என பேசியிருந்தார்.
இன்னொரு புறம் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிசியாக பங்கேற்று வருகிறார் கமல்.
கோவையில் கமல்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் வெற்றிபெறுவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் தோல்வியைத் தழுவினார். பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் வெற்றிப் பெற்றார். இந்நிலையில், மீண்டும் கோவை மக்களை இன்று சந்தித்துப் பேசியுள்ளார் கமல்.
விக்ரம் 100வது நாள் விழா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், சமீபத்தில் 100 நாட்களையும் தியேட்டரில் அந்த படம் கடந்து மிகப்பெரிய சாதனையையும் படைத்தது. அதனை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு படக்குழுவினரையும் தனது ரசிகர்களையும் வாழ்த்தி பேசினார்.
இந்தியன் 2
லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னை பிரசாத் லேப்பில் பரபரப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போட்டோஸ் மற்றும் வீடியோ என எதுவுமே கசிந்து விடாத வண்ணம் இயக்குநர் ஷங்கர் கடும் கட்டுப்பாட்டுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.
மாணவிகளுடன் கமல்
இந்நிலையில், கோவை ராஜவீதி அரசு பள்ளிக்கு சென்ற கமல்ஹாசன் மாணவிகளுடன் கலந்துரையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை திறந்து வைத்த கமல்ஹாசன் கழிப்பறை வசதியை செய்து தர அரசு சம்மதித்துள்ளது. அரசை சம்மதிக்க வைத்த வேலையை செய்துள்ளோம் என பேசியுள்ளார்.
அலைமோதிய கூட்டம்
நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேச ஒட்டுமொத்த பள்ளி மாணவிகளும் சூழ்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. சினிமா, பிக் பாஸ் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அரசியலிலும் மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார் கமல் என அவரது தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.