நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என தமிழ் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர், அருந்ததீ போன்ற பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு வயது 40. இவரது திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் அடிக்கடி செய்தியாகும். மேலும், இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை இருவரும் உறுதிசெய்யவில்லை.
அனுஷ்கா – பிரபாஸ் ஆகியோர் இணைந்து பில்லா (தெலுங்கு), மிர்சி, பாகுபலி ஆகிய திரைப்படங்களில் கதை நாயகர்களாக நடித்துள்ளனர். திரையில் மட்டுமின்றி திரைக்கு வெளியேவும் இவர்களின் காம்போ நன்றாக இருப்பதாக பேச்சு அடிப்பட்டது. தொடர்ந்து, பல பட விழாக்களிலும் இருவரும் ஒன்றாக தோன்றியுள்ளனர். இதனால், அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. அது மட்டுமின்றி, அவர்கள் தீவிரமாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் பிரபாஸின் பெரியாப்பாவும், நடிகருமான கிருஷ்ணம் ராஜூ மரணமடைந்தார். அதற்கு முன்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் சேர்ந்து அங்கு வந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. இதன்மூலம், அவர்கள் காதலித்து வருவது உறுதியானதாக கூறப்பட்டது.
இருவரும் 40 வயதை கடந்து விட்ட நிலையில், விரைவில் தங்களின் திருமண செய்தியை வெளியே அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.