சென்னை: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா கேட்டுக் கொண்டுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பச்சமுத்துவிற்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பச்சமுத்துவை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாகவே, பச்சமுத்து நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
ஆனால், உண்ட வீட்டையே இரண்டாக்கும் காரியத்தை செய்வது போல, தனக்கு வெற்றி பெற்றுத்தந்த நன்றியை மறந்துவிட்டு திமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து பச்சமுத்து பேசி வருகிறார் என்று தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கான உதாரணமாக கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பச்சமுத்து கலந்து கொண்டு பேசியதை தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா சுட்டிக் காட்டினார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன், அவசரப்பட்டு விட்டோம்” என பச்சமுத்து பேசி இருந்தார்.
இவ்வாறு அவதூறு பரப்பியும், கூட்டணி தர்மத்தை தொடர்ந்து மீறி திராவிட முன்னேற்றக் கழகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பச்சமுத்து எம்.பி செயல்படுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பிய தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா, பச்சமுத்து பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட தொடங்கி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
திமுகவை விமர்சிக்கும் பச்சமுத்து இனியும் எம்பியாக தொடர்வதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்று அவர் காட்டமாக தெரிவித்தார்.
தமிழக மக்கள் நலனுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய தளபதி முக ஸ்டாலின் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த துடிக்கும் பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன் என ஜிஜி சிவா கூறினார்…