கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை தொகுதி. முன்னாள் முதல்வரும், தி.மு.கவின் முன்னாள் தலைவருமான கலைஞர், முதன்முதலில் தேர்தலில் நின்று, எம்.எல்.ஏவாக வாகை சூடிய தொகுதி குளித்தலை. இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக, தி.மு.கவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருக்கிறார். இவரைதான் பா.ஜ.கவுக்கு இழுக்க, பா.ஜ.க மாநில நிர்வாகிகள் பேசியதாகவும், அவர் பா.ஜ.கவுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் இருதினங்களாக ஒரு பரபர செய்தி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இந்த நிலையில், இந்த தகவலை வைத்து, தி.மு.க மற்றும் பா.ஜ.க தரப்பிலும் பல தகவல்கள் உலா வந்தன. அதுகுறித்து பேசிய அரசியல் புள்ளிகள் சிலர்,
“இந்த தகவல் உண்மையா இருக்காதுனுதான் நினைக்குறோம். ஆனால், முற்றிலும் உண்மை இல்லாமலும் இல்லைனு பேசிக்குறாங்க. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், செந்தில் பாலாஜி வைத்ததுதான் சட்டம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றினாலும், கரூர் தொகுதியில் ஜெயித்த செந்தில் பாலாஜியை தவிர்த்து, மற்ற மூன்று தொகுதி எம்.எல்.ஏக்களும் செந்தில் பாலாஜி மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்றாங்க. குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி தொகுதி மொஞ்சனூர் இளங்கோனு மூன்று எம்.எல்.ஏக்களும், செந்தில் பாலாஜி தங்களை சுதந்திரமா செயல்படவில்லைனு புலம்புறாங்க. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் செந்தில் பாலாஜி சொல்றபடிதான் போகணும், செயல்படணும், கூடவே வரும் அவரோட ஆதரவாளர் சொல்படி செயல்படணும்னு அவங்க போட்ட உத்தரவுபடி செயல்பட வேண்டியிருக்கு. கான்ட்ராக்ட் விசயத்தில் செந்தில் பாலாஜி ஆதரவாளர் ஒருவர்தான் முழுமையா ஆக்கிரமிச்சுக்கிறார்” என்கிறார்கள்.
ஆனால், தி.மு.கவைச் சேர்ந்த ஒரு புள்ளி, “மாணிக்கம் பரம்பரை தி.மு.ககாரர். அவர் கண்டிப்பாக கட்சிமாறமாட்டார். பா.ஜ.கவினர் இப்படி பொய்யான தகவலைப் பரப்பி தி.மு.கவில் குட்டையை குழப்பி, மீன் பிடிக்கப் பார்க்குறாங்க. அதுக்காக, ‘மாணிக்கத்துக்கு பண கஷ்டம், செந்தில் பாலாஜி மேல அவர் அதிருப்தியில் உள்ளார்’னு இஷ்டத்துக்கு கதை கட்டுறாங்க. ஆனால், இப்படி ஒரு வதந்தி பரவியதால், மாணிக்கத்திடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விளக்கம் கேட்டதாகவும் சொல்றாங்க. அதனால், மாணிக்கம், ‘எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கலை’னு விளக்கம் கொடுத்துட்டார். பிரச்னை முடிஞ்சுட்டு. ஆனால், இதை திட்டமிட்டு இந்த பொய்யைப் பரப்பியதே, பா.ஜ.கவினர்தான்” என்றார்.
ஆனால், பா.ஜ.க தரப்பிலோ, “பொய்யான தகவல் இல்லை. நாங்க குட்டையை குழப்பவும் இல்லை. எங்க கட்சி மேலிடத்தில் இருந்து மாணிக்கதிடம் பேசியது உண்மை. இந்த விசயம் ரகசியமா நடந்திருக்கு. இப்ப எப்படியோ வெளியில் வந்துட்டு” என்றார்கள்.
இதுபற்றி, குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கத்திடம் பேசினோம். “நான் பரம்பரை தி.மு.ககாரன் சார். எந்த சூழலிலும் நான் கட்சிமாறமாட்டேன். என்னிடம் யாரும் பேசவில்லை. இங்குள்ள சிலர் பொய்யான தகவலை, நடக்காத ஒன்றை நடந்ததாக திரித்து பரப்புகின்றனர். எனக்கு கட்சி மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கு. 30 வருஷமா நகரச் செயலாளராக இருக்கிறேன். இப்படி என்னை அரசியல் உயர்த்திய தி.மு.கவுக்கு எனது இறுதிகாலம் வரை விசுவாசமாக இருப்பேன். அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பாக செயல்படுறார். எங்களுக்கு உறுதுணையாகவும், அனுசரணையாகவும் இருக்கிறார். அவர்மீது எங்களுக்கு அதிருப்தினு இல்லாத ஒன்றை முடிச்சுப்போட்டு, தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறாங்க. பொய்தகவலை பரப்பியவர் மீது வழக்கு கொடுக்க, வக்கீல் நோட்டீஸ் ரெடி பண்ணிட்டு இருக்கிறேன். மத்தபடி, எல்லாமே இட்டுக்கட்டிய பொய்கள் சார்” என்றார்.