சென்னை: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2022 -23 கல்வியாண்டு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர்கள், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தம் 2,526 இடங்கள் உள்ளன. அதேபோல், மாநிலத்தில் உள்ள 348 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு கீழ் இந்தெந்த படிப்புகளுக்கு 15,307 இடங்கள் உள்ளன.
அதன்படி 2022 -23ம் கல்வியாண்டிற்கான துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்தான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு நடைபெற்றது. இந்த படிப்புகளுக்கு மொத்தம் 87,764 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு 58,980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 58,141விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மருந்தாளுநர் படிப்புக்கு 5,271பேர் விண்ணப்பித்த நிலையில் 5,206 விண்ணப்பங்களும் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 12,624 பேர் விண்ணப்பித்ததில், 12,478 விண்ணங்களும் ஏற்கப்பட்டுள்ளன.
டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்புக்கு 948 விண்ணப்பங்களும், பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கு 7540 பேருக்கான விண்ணப்பங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசை பட்டியளை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டுள்ளார். மேலும், தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மாணவர் சேர்க்கை வரும் 21-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நாட்கள் நடைபெறும் என்றும், துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்புகளில் மொத்தமுள்ள 8,225 இடங்களில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள் கிடைக்கும். அதேபோல, 2,160 பிடிஎஸ் இடங்களில் 114 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். நீட் தேர்வு பட்டியல் கிடைத்தவுடன், மாணவர் சேர்க்கை நடவடிக்கை தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.