பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, சசி தரூர் வாழ்த்து 

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இன்று(செப்.17) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் மோடிக்கு ஒரு நாள் முன்னதாகவே தனது வாழ்த்தை மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதில், எந்த ஒருவிஷயத்திற்கும் முன்னதாகவே வாழ்த்து தெரிவிப்பது ரஷ்ய கலாச்சரத்தில் இல்லை. அதனால் நான் இப்போது அதனைச் செய்யப்போவதில்லை. என்றாலும் ரஷ்யர்கள் உங்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து

மோடியின் பிறந்தநாளுக்கு காங்கிரஸ் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற்று வாழ பிரதமர் நரேந்திர மோடியை அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். நாட்டு மக்கள் பலரைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி அவர்களுக்கு முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் ஒளியைக் கொண்டு வர அவர் பணியாற்றட்டும்” என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

— Shashi Tharoor (@ShashiTharoor) September 17, 2022

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நல்ல ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய கலாச்சாரத்தின் வழியாக நமது நாட்டை ஒவ்வொரு துறையையும் அதன் வேர்களுடன் இணைத்து முன்னேற்றி வருகிறார். மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உலக வல்லரசாக இந்தியா உருவாகி வருகிறது. உலகமே மதிக்கும் தலைவராக மோடி தனது முத்திரையை பதித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், “மோடியின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மனிதனுக்கு செய்யும் சேவையிலும், அவனது உயிரைக் காப்பாற்றுவதிலும் ரத்ததானம் மிகவும் முக்கியமானது. இன்று தொடங்க இருக்கும் ரக்தன் அமிர்த மஹோத்சவத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல மக்கள் பலர் நமோ செயலியின் மூலம் பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிந்தது வருகின்றனர். இதற்காக இந்த ஆண்டு நமோ செயலியில் சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பிரதமர் மோடிக்கான பிறந்தநாள் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.