புதுடெல்லி: மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த விநாயகர் சிலை, அயோத்தி ராமர் கோயில் மற்றும் வாரணாசி காசி-விஸ்வநாதர் கோயிலின் மாதிரிகள் ஆகியவை மின்னணு ஏலத்தில் விடப்படுகின்றன.
பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் 28 அடி உயர நேதாஜி சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை வடித்த சிற்பி யோகிராஜ், இந்த சிலையின் மாதிரியை பிரதமர் மோடிக்கு கடந்த ஏப்ரல் மாதம் பரிசளித்தார். அதுவும் இந்த ஏலத்தில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தாமஸ் கோப்பை போட்டி ஆகியவற்றில் பதக்கங்கள் வென்ற வீரர்களும், விளையாட்டு சாதனங்களை பிரதமருக்கு பரிசாக அளித்துள்ளனர். அவைகளும் இந்த ஆன்லைன் ஏலத்தில் இடம் பெறுகின்றன. இந்த ஏலம் அக்டோபர் 2-ம் தேதி முடிவடைகிறது. பரிசு பொருட்களில் சில மாடர்ன் ஆர்ட் தேசிய கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிதி நமாமி கங்கை திட்டத்துக்கு செல்லும்.