'பிரிவினைவாத அரசியல் செய்கிறார்' – அமித் ஷா மீது கேசிஆர் அட்டாக்!

“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரிவினைவாத அரசியல் செய்கிறார்,” என, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

நிஜாம் ஆட்சியாளர்கள் வசம் இருந்த ஹைதராபாத், 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்தியாவுடன் இணைந்தது. இந்த தினத்தை ஹைதராபாத் விடுதலை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தப் பெயரில் விழாவை கொண்டாடி வரும் நிலையில், மாநில அரசோ, தெலங்கானா தேசிய ஒருமைப்பாட்டு தினம் என்ற பெயரில் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் இன்று மத்திய அரசு சார்பில் நடைபெற்ற விழாவை, தெலங்கானா மாநில முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் புறக்கணித்து, மாநில அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இங்கு ஆட்சி செய்தவர்கள், ஹைதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட தயாராக இல்லை” என விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பேரணியில், தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பேசியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரிவினைவாத அரசியல் செய்கிறார். தெலங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மசோதா மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.

இங்கு பிரித்தாளும் அரசியல் செய்யும் அமித் ஷாவிடமும், இன்று பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியிடமும் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து, அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளியுங்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை அவர் கூட நிறுத்த மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.