நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுக்க பக்தர்கள் வந்துபோகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலையிலுள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலைப் பகுதிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடிவாரப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உற்சவர் சிலையை வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். மற்றபடி, மலைமீது பெருமாளைத் தரிசிக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று தடை முழுமையாக நீங்கி விட்டதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் மலையிலுள்ள பெருமாளைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், ஆவணி மாதக் கடைசி சனிக்கிழமை, புரட்டாசி மாதத்தின் முதலாம் சனிக்கிழமையாகவும் ஐப்பசி மாத முதல் சனிக்கிழமை புரட்டாசி மாத சனிக்கிழமையாகவும் கணக்கிடப்பட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில், செப்டம்பர் 17, 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய 6 நாள்கள் புரட்டாசி சனிக்கிழமைகளாகத் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
இதுபற்றி, நைனாமலை பெருமாள் கோயில் செயல் அலுவலர் லட்சுமிநாராயணன்,
“நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற இந்தப் பெருமாள் கோயிலில் கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வருடம் கொரொனா தொற்று நீங்கியுள்ளதால், கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் கோயில் நடை திறந்திருக்கும். சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடை மூடப்படும். அன்று காலை 9 மணியளவில் பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும். பக்தர்கள் வருகைக்காக மலைப்பகுதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், குடிநீர், கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மலை மீது செல்ல முடியாதோருக்காக அடிவாரப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உற்சவர் சிலை வைத்து பூஜைகள் நடைபெறும்.
ரூ.5 மற்றும் ரூ.25 என்ற சிறப்புக் கட்டண வரிசை ஏற்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதேபோல், முடி காணிக்கை செலுத்துவோருக்குத் தேவையான குளியல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசி சனிக்கிழமைகளில் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் பாதுகாப்புடன் சென்று வரவேண்டும்” என்றார்.