'பொன்னியின் செல்வன்' – எதிர்பார்ப்பும்… காத்திருக்கும் சவால்களும்…!

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரகுமான், அஷ்வின் என பெரிய பட்டாளமே நடித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்'.

இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்., 30ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிது. சில வெளிநாடுகளில் இப்படத்திற்கான முன் பதிவை இப்போதே ஆரம்பித்துவிட்டனர். ஆனால், படக்குழுவினர் இன்னும் இந்த பிரமாண்ட சரித்திரப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க பெரிய அளவில் முயற்சிகள் செய்யவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

எம்ஜிஆர் – கமல் தொடங்கி மணிரத்னம் வரை தெலுங்கில் உருவான 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்,' கன்னடத்தில் உருவான 'கேஜிஎப்' ஆகியவை பிரம்மாண்ட படங்களாக அமைந்து வசூலிலும் 1000 கோடியை கடந்து சாதனை படைத்தன. அப்படங்களின் கதைகளுக்கும், பிரம்மாண்டத்திற்கும் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் பல மடங்கு உயர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடராக வெளிவந்து, பின் புத்தகமாக வெளிவந்து பல லட்சம் பேர் படித்த அந்த நாவலை இதற்கு முன்பு எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் திரைப்படம் எடுக்க முயன்றும் நடக்கவில்லை. தற்போது மணிரத்னத்தால் எடுக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியாகப் போகிறது.

பட்ஜெட் என்ன
கொரோனா உள்ளிட்ட பல சவால்களை சந்தித்து இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். நாவலில் உள்ள அவ்வளவு சம்பவங்களையும் படமாக எடுத்திருக்க முடியாது. நாவலை அப்படியே படமாக்க வேண்டுமென்றால் ரூ.1000, ரூ.2000 கோடி வரை தேவைப்படலாம். ஆனால், இந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை ரூ.300 முதல் 400 கோடி வரை படமாக்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை
இதுவரை இப்படத்திற்காக ஒரே ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்றுள்ளது. அது படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு. தமிழ் சினிமா உலகின் டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். படக்குழுவினர் படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். ஆனாலும், தமிழைத் தவிர மற்ற மொழிகளுக்கான முன் விளம்பர நிகழ்ச்சிகள் எதுவும் இன்னும் பெரிய அளவில் நடைபெறவில்லை. தெலுங்குக்காக ஐதராபாத்தில் மட்டும் விக்ரம், கார்த்தி கலந்து கொண்ட ஒரு சிங்கிள் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை மட்டும் கடந்த மாதம் நடத்தினார்கள்.

'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களை சரியான திட்டமிடலுடன் வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பல ஊர்களில் சுற்றுப் பயணம் செய்து பிரபலப்படுத்தினார்கள். அந்த விதத்தில் 'பொன்னியின் செல்வன்' குழு இன்னமும் பின் தங்கியே உள்ளனது.

உலக சுற்று பயணத்திற்கு ஆயத்தம்
பான் இந்தியா படமென்றால் மற்ற தென்னிந்திய மொழிகளுக்காக தென்னக மாநிலங்களில் முக்கிய ஊர்களிலும், ஹிந்திக்காக வட இந்தியாவிலும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இன்னும் இரண்டு வாரங்களில் அதை அனைத்தையும் நடத்தி முடித்து விடுவார்களா என்பதும் சந்தேகம்தான். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் இந்தப் படத்தை பெரிய அளவில் வெளியிடுகிறார்கள். அதற்காக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சி நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

எதிர்பார்ப்பும், சந்தேகமும்…
அந்தக் காலம் முதல் இந்த டிஜிட்டல் யுகம் வரை தமிழ் வாசர்களிடையே ஏகோபித்த வரவேற்பில் உள்ள ஒரு நாவல். அப்படிப்பட்ட ஒரு நாவல் படமாக்கப்பட்டுள்ளது அதன் வாசர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், ஐந்து பாகங்களாக 2500 பக்கங்களைக் கொண்ட நாவலை இரண்டு திரைப்படங்களாக எப்படி எடுத்திருப்பார்கள் என்ற சந்தேகமும் அவர்களிடம் உள்ளது.

போட்டியை சமாளிக்குமா
அது ஒரு புறமிருக்க, 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாகும் சமயத்தில் மேலும் சில பல முக்கிய படங்கள் மற்ற மொழிகளிலும் கடும் போட்டியைக் கொடுக்க இருக்கின்றன. அவற்றை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழிலேயே தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' படம் செப்டம்பர் 29ம் தேதியன்று வெளிவர உள்ளது. ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடித்துள்ள 'விக்ரம் வேதா' படம் வெளியாகிறது. தெலுங்கில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் சிரஞ்சீவி நடித்துளள 'காட் பாதர்', நாகார்ஜுனா நடித்துள்ள 'த கோஸ்ட்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. கன்னடம், மலையாளப் படங்களைக் காட்டிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மேலே சொன்ன படங்களின் கடும் போட்டிகளையும் 'பொன்னியின் செல்வன்' சமாளித்தாக வேண்டும்.

பிளஸ் பாயின்ட் ஏராளம்
தமிழில் இதற்கு முன்பு இப்படி ஒரு மல்டி ஸ்டார் படங்கள் வந்ததில்லை, முக்கியமான இரு வேடங்களில் ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரகுமான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு, இவற்றிற்கும் மேலாக மணிரத்னம் இயக்கம் என இந்தப் படத்திற்கான பிளஸ் பாயின்ட்கள் நிறைய உள்ளன.

பாகுபலிக்கே தமிழ் சினிமா தான் முன்னோடி
ஒரு சில ரசிகர்கள் 'பொன்னியின் செல்வன்' டீசர், டிரைலரைப் பார்த்துவிட்டு 'பாகுபலி' படத்தின் சாயல் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'பாகுபலி' திரைப்படமே எம்ஜிஆர் நடித்து வெளிவந்த 'அடிமைப் பெண்' படத்தின் உல்டாதான் என்று அப்படம் வெளிவந்த போது பல தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் அடித்திருந்தார்கள். அதோடு 'பொன்னியின் செல்வன்' நாவலின் சில காட்சிகளையும் தனது 'பாகுபலி' படத்தில் ராஜமவுலி பயன்படுத்தியதை ஆதாரங்களுடன் சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்கள்.

இன்றைய ரசிகர்களுக்கு புது விருந்து

பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் “சந்திரலேகா, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, உத்தம புத்திரன், மன்னாதி மன்னன், அவ்வையார், திருவிளையாடல், ராஜராஜ சோழன், கர்ணன், அலிபாபாவும் 40 திருடர்களும், பூம்புகார், மனோகரா, நாடோடி மன்னன், சிவகங்கைச் சீமை, பாக்தாத் திருடன், மதுரை வீரன், மகாதேவி, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, அடிமைப் பெண், வீரபாண்டிய கட்டபொம்மன், குலேபகாவலி, அரச கட்டளை, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வேதாள உலகம், பூலோக ரம்பை, கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், வஞ்சிக்கோட்டை வாலிபன், ராஜராஜ சோழன்” என பல சரித்திரப் படங்கள் அதன் உருவாக்கத்திற்காக இன்று வரை கொண்டாடப்படுகின்றன.

'பொன்னியின் செல்வன்' படம் அதன் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம். அதன் உருவாக்கத்தை டீசர், டிரைலர் ஆகியவற்றை வைத்து விமர்சிப்பது முறையல்ல. படம் வந்த பின் அது பற்றிய விமர்சனங்களை வைப்பதே முறை.

இப்படியெல்லாம் பிரம்மாண்டத்தைக் காட்டிய தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் 'பொன்னியின் செல்வன்' படம் இன்றைய சினிமா ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமையலாம்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்த லட்சக்கணக்கான வாசகர்கள் ஒரு முறை வந்து பார்த்தாலே போதும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் சாதனையைப் படைக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.