சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதனிடையே, ரஷியா அதிபர் புதினை தனியாக சந்தித்து உக்ரைன் போர் தொடர்பாக பேசினார். இதில் பிரதமர் மோடி பேசியதை அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று முன் தினம் உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு பின் இந்த உச்சி மாநாடு உலக தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு
உஸ்பெகிஸ்தானில் இருக்கும் சமர்கண்ட் நகரத்தில் நடந்த இந்த கூட்டத்தில், ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாகவும், ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாகவும் அந்த நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் போது பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
புதினுடன் சந்திப்பு
உக்ரைன் ரஷியா போர் தொடங்கிய பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது அவர் இருதரப்பு உறவினை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய விஷயங்கள் குறித்தும் பேசினார். இரு தலைவர்களும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி கூறுகையில், ”இது போருக்கான காலம் அல்ல. நான் இது தொடர்பாக உங்களிடம் பலமுறை தொலைபேசி அழைப்பில் பேசியிருக்கிறேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை உலகை ஒன்றாக வைத்திருக்கும்” என்று பேசினார்.
ரஷ்ய அதிபர் பதில்
மோடிக்கு பதிலளித்து பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ”உக்ரைனில் உள்ள மோதல்கள் தொடர்பான விஷயத்தில் உங்கள் கவலைகளையும், இந்த விவகாரத்தில் உங்கள் நிலைப்பாட்டையும் நான் அறிவேன்” என்றார். மேலும், ‘நாங்களும் இவையெல்லாம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் விரும்புகிறோம்’ என்றும் பேசினார்.
இந்தியாவின் நலனே முக்கியம்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளை மதிக்காமல் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலில் ஈடுபடுவதாக அமெரிக்கா பலமுறை தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நலனே முக்கியம் என்று பதிலடி கொடுத்த மத்திய அரசு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு உள்ளிட்டவைகளை தொடர்ந்து பெறுவதை சுட்டிக்காடி தக்க பதிலடி கொடுத்தது.
மோடியை பாராட்டி செய்திகள்
அதேபோல், ஐக்கிய நாடுகள் அவையிலும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் பெரும்பாலனவற்றை இந்தியா புறக்கணித்தே வருகிறது. இதனால், அமெரிக்க ஊடகங்களும் இந்தியாவின் நிலைப்பட்டை கடுமையாக சாடி வந்தன. இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதினை சந்தித்த பிரதமர் மோடி, போருக்கான காலம் இது அல்ல என்று பேசியதை அமெரிக்க ஊடகங்கள் வரவேற்றுள்ளதோடு, பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளன. அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் பலவற்றிலும் மோடியை பாராட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
போனில் உங்களிடம் பேசியிருக்கிறேன்
குறிப்பாக பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தற்போதைய காலம் போருக்கானது அல்ல என்றும் இது தொடர்பாக போனில் உங்களிடம் பேசியிருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி புதினிடம் பேசியிருக்கிறார். கவனம் பெறும் வகையில் வெளிப்படையாக பிரதமர் மோடி கடிந்து கொண்டு இருக்கிறார். புதினுக்கு அனைத்து பக்கங்களிலும் இருந்து கடுமையான அழுத்தங்கள் வந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலம் போருக்கானது அல்ல
அதேபோல், மற்றொரு பிரபல ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய காலம் போருக்கானது அல்ல என்று இந்திய தலைவர் புதினிடம் தெரிவித்து இருக்கிறார். இந்த சந்திப்பின் தொனி நட்பாக இருந்தது. இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்த வரலாறுகளை பேசினர். பிரதமர் மோடி இந்த கருத்தை தெரிவிப்பதற்கு முன்பாக, உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை புரிந்து கொண்டு இருப்பதாக புதின் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.