மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது – கமலை வறுத்தெடுக்கும் வானதி

கோவை சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமரின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களுடைய வேண்டுகோளின் படி அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு அங்கன்வாடி சார்பாக நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து, கமல் ஹாசன் தெற்கு தொகுதியில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுவருவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி, “ ஒரு வருடம் கழித்து இப்போதுதான் அவருக்கு தொகுதி ஞாபகம் வந்திருக்கிறதுபோல. மனுக்கள் வாங்கலாம்,வாங்கிக்கொண்டு சென்று அதனை பிக் பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் நேரடியாக களத்தில் நின்று செய்யலாம். இப்போதாவது அவருக்கு கோவை தெற்கு தொகுதி ஞாபகம் வந்தது நல்ல விஷயம்” என்று பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், “ முதலமைச்சர் ஆ. ராசா பேச்சை ஆதரிக்கிறாரா. அவரின் இந்த பேச்சை திராவிட முன்னேற்ற கழகம் ஒத்துக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் கட்சியின் மூத்த நிர்வாகி; முன்னாள் மத்திய அமைச்சர்; தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் இம்மாதிரி சட்டத்திற்கு எதிரான வகையில் பேசி இருக்கிறார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பாஜக புகார் கொடுத்துள்ளது. காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இம்மாதிரியான பேச்சுகளை முதலமைச்சர் மௌனமாக வேடிக்கை பார்ப்பதை, ரசிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் இதற்கென்ன உரிய விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

பெரியார் உணவகத்தை அடிப்பது, உடைப்பதில் எந்த விதமான உடன்பாடு பாஜகவிற்கு கிடையாது. இன்று சமூக நீதி நாள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது, உண்மையான சமூக நீதி நாள் என்றால் பிரதமரின் பிறந்தநாளைத்தான் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும்,ஏனென்றால் பெரியார் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு என்ன கனவு கண்டாரோ அதனை பிரதமர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.