புதுடெல்லி: நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் ரூ.60 என்ற விலையில் பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்தகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கான மருந்தான சிட்டாக்ளிப்டின் மற்றும் அதே வகையை சேர்ந்த மருந்துகள் பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள்(ஜன அவுசாதி கேந்திரா) மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 மி.கிராம் சிட்டாக்ளிப்டின் 10 மாத்திரைகளின் விலை ரூ.60, அதே போல் 100 மி.கிராம் சிட்டாக்ளிப்டின் பாஸ்பேட் 10 மாத்திரைகளின் விலை ரூ.100 ஆகும்.
சிட்டாக்ளிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைட் (50 மி.கி/500 மி.கி.) மாத்திரை விலை ரூ.65. அதே வகையான மாத்திரை (50 மி.கி/ 1000 மி.கி.) ரூ.70க்கும் விற்கப்படுகிறது. இவை நேற்று முதல் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத்திரைகள் பிராண்டட் மாத்திரைகளின் விலையை விட 60 முதல் 70 சதவீதம் குறைவாக கிடைக்கும். இதை போன்ற பிராண்டட் மாத்திரைகள் மருந்தகங்களில் ரூ.162 முதல் ரூ.258 வரை விற்கப்படுகின்றன என்று ஒன்றிய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரியின் மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ், ஏழை மக்களும் உயிர் காக்கும் மருந்துகளை மலிவு விலையில் வாங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 8,700 மலிவு விலை மருந்தகங்கள் செயல்படுகின்றன.