ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உட்பட இந்த அமைப்பிலுள்ள நாடுகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர். அப்போது, பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் புதினுடன் பேசிய மோடி, “இன்றைய தசாப்தம் என்பது போருக்கானது அல்ல என்பது எனக்குத் தெரியும். இனிவரும் நாள்களில் நாம் எவ்வாறு அமைதிப் பாதையில் முன்னேறுவது என்பதுபற்றி கலந்துரையாடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. மேலும் உங்களின் பார்வையைப் புரிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்’’ என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய புதின், “என் அருமை நண்பரே, நாளை(இன்று) நீங்கள் உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னால் இப்போது வாழ்த்து சொல்ல முடியாது. ஏனெனில் ரஷ்ய பாரம்பரியத்தின்படி, நாங்கள் ஒருபோதும் வாழ்த்துக்களை முன்கூட்டியே வழங்குவதில்லை. எனவே நட்பு நாடான இந்தியாவுக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள். மேலும், உங்கள் தலைமையில் இந்தியா செழிக்க வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்தார்.