பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது.
இன்று முதல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது. இதில் நாடெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.
இதே போல் தூய்மை பணிகள், மருத்துவ முகாம் நடத்துவது, அன்னதானம் செய்வது போன்றவற்றையும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நமோ ஆப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக
தமிழ்நாடு பாரதிய ஜனதா சார்பில் மோடியின் பெயரில் கபடி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த் குழந்தைகளுக்கு தலா 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக அணிவிக்கப்பட்டது. இப்படி பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து இருக்கிறார்கள்.
சிறுத்தைகள்
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் சென்றார். அங்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் அந்த இனத்தை சேர்ந்த சிறுத்தைகளை மோடி திறந்துவிட்டுள்ளார்.
குவிந்த வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் சினிமா, விளையாட்டு பிரபலங்களும் மோடியை வாழ்த்தியுள்ளனர்.
தமன்னா வாழ்த்து
அந்த வகையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “புதுமையாளர், முற்போக்கு சிந்தனையாளர், உலகிற்கு உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தும் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர். மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.