முஸ்லிம்களை மிரட்டி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்..! – ஜவாஹிருல்லா காட்டம்..!

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் நிலவிவரும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கோடு சில சங்கப்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதை தெளிவுப்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், நேற்றைய தினம் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு பள்ளிக்கூடம் திரும்பும் வழியில் மாணவர்களை வழிமறித்து உத்தமபாளையம் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் வேல் சிவக்குமார், இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா மற்றும் வீர சிவாஜி, வசந்த் உள்ளிட்ட சங்கப்பரிவார் அமைப்பினர் மிரட்டியுள்ளனர்.

தொழுகைக்குச் சென்று வந்த முஸ்லிம் மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்கு செல்லக்கூடாது என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களை தொழுகைக்கு அனுப்பிய பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர். சங்கப்பரிவார் அமைப்பினரின் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்தும் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரியும் முஸ்லிம்கள் போராடியபோது அவர்களைக் கைது செய்து பிறகு விடுவித்துள்ளது காவல்துறை.

அதேபோல், சென்னை அசோக் நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட, ரங்கராஜபுரத்தில் உள்ள அரபி பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த 8ஆம் வகுப்பு மாணவனை 40 வயதுள்ள ஒரு மர்ம நபர் தாக்கி, முஸ்லிம்கள் பயன்படுத்தும் தொப்பியை பற்றி தரக்குறைவாகப் பேசி தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகவும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நேற்று ஒரே நாளில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களை தனித் தனி சம்பவங்களாக அணுகாமல், தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ள அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு நடைபெறும் சம்பவங்கள் என்ற கண்ணோத்தோடு தமிழக காவல்துறை அணுக வேண்டும்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறுபான்மையின முஸ்லிம்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், இதற்கு மூளையாக செயல்படுவர்களையும் உடனே கைது செய்து சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.